கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.இதுவரை 53 பேர் இறந்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 20 பேர் பஞ்சாபிலும் 33 பேர் டெல்லி எல்லையிலும் உயிரிழந்தனர்.

அரசு அமுல் செய்துள்ள விவசாய சட்டங்களை ரத்து செய்யுமாறு விவசாயிகள் கோருகின்றனர். இவை சீர்திருத்தங்கள் என்று அரசு சொல்லும் அதே நேரம் இந்த சட்டங்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

விவசாயிகள் உயிரிழக்க சாலை விபத்து முதல் குளிர் வரை பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதே நேரத்தில், சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த சிலரைப்பற்றி இங்கே பார்ப்போம்.

மேவா சிங், 48, டிக்ரி எல்லையில் உயிரிழப்பு

டிசம்பர் 7ஆம் தேதி. இடம் டெல்லியை ஒட்டியுள்ள டிக்ரி எல்லை. 48 வயதான மேவா சிங் போராட்டம் குறித்து ஒரு கவிதை எழுதிக்கொண்டிருந்தார். சில வரிகளை எழுதிய பிறகு தனது கவிதையை நாளை எழுதி முடிப்பேன் என்று நண்பர்களிடம் கூறினார்.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.

"நாங்கள் ஒரே அறையில் இருந்தோம், அன்று இரவு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். மேவா சிங்க்கு பசி எடுத்தது. அவர் சாப்பிட வெளியே சென்றார்," என்று அவரது நண்பர் ஜஸ்விந்தர் சிங் கோரா நினைவு கூர்ந்தார்.

"ஒரு நபர் வெளியே விழுந்துகிடப்பதாக யாரோ எங்களிடம் கூற வந்தார்கள். நாங்கள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது மேவா சிங் தரையில் கிடப்பதைக் கண்டோம்" என்று அவர் கூறினார்.

மேவா சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்றதும், மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேவா சிங்கால் தன் கவிதையை கூட முடிக்க முடியவில்லை. அவர் மோகா மாவட்டத்திலிருந்து வந்தவர்.

76 வயதான பாக் சிங், சிங்கு எல்லையில் இறப்பு

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயதான விவசாயி பாக் சிங் டிசம்பர் 11ஆம் தேதி காலமானார்.

தனது தந்தை போராட்ட இடத்தில் மிகவும் குளிரான இடத்தில் தங்கியிருந்ததாகவும், கடைசி நாளில் அவருக்கு சிறிது வலி ஏற்பட்டதாகவும், பாக் சிங்கின் மகன் ரகுபீர் சிங் தெரிவித்தார்.

அவர் முதலில் சோனிபத்தில் உள்ள மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து ரோஹ்தக்கிலுள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.

பாக் சிங்கின் மரணம் அவரது குடும்பத்தை உலுக்கியுள்ளது. இருந்தபோதும் அவரது குடும்பம் மீண்டும் போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராக உள்ளது.

சட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவரது மருமகள் குல்விந்தர் கவுர் கூறுகிறார். "எனது மாமனார் தனது குழந்தைகளுக்காக உயிரைத் தியாகம் செய்தார், நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

பாபா ராம் சிங், 65, தற்கொலை

ஹரியாணாவின் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர் பாபா ராம் சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகளின் அவல நிலையைப் பார்த்து அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 9ஆம் தேதி முதல் முறையாக சிங்கு எல்லைக்கு சென்றபிறகு அவர் ஒரு குறிப்பை எழுதினார்.

போராட்ட இடத்தில் அமர்ந்திருந்த விவசாயிகளின் நிலையைப்பார்த்து பாபா மிகவும் மன வருத்தம் அடைந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அரசு புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அம்ரிக் சிங், 75, டிக்ரி எல்லையில் இறப்பு

குர்தாஸ்பூரில் வசிக்கும் அம்ரிக், மற்ற எதிர்ப்பாளர்களுடன் பகதுர்கர் பேருந்து நிலையத்திற்கு அருகே தங்கியிருந்தார். அவர் டிசம்பர் 25ஆம் தேதி குளிர் காரணமாக இறந்தார்.

"அவர் தனது மூன்று வயது பேத்தியுடன் போராட்டத்தில் அமர்ந்திருந்தார். போராட்டம் முடியும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என்று நாங்கள் நினைத்தோம்," என்று இறந்தவரின் மகன் தல்ஜித் சிங் குறிப்பிட்டார்.

"அன்று அவர் காலையில் எழுந்திருக்கவில்லை. நாங்கள் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மல்கித் கவுர், 70, சாலை விபத்தில் உயிரிழப்பு

பஞ்சாபின் மன்ஸா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்கித் கவுர், மஜ்தூர் முக்தி மோர்ச்சாவின் உறுப்பினராக இருந்தார், அவர் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஃபதேஹாபாத் அருகே ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

"அவர் சில நாட்கள் வரை போராட்டத்தில் அமர்ந்திருந்தார். டிசம்பர் 27ஆம் தேதி இரவு உணவு விநியோக இடத்திற்கு அருகே நாங்கள் சென்றபோது ஒரு கார் அவர்மீது மோதியது. அவர் காயமடைந்திருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் இறந்துவிட்டார்," என்று மோர்ச்சாவின் மாநிலப்பிரிவுத் தலைவர் பகவந்த் சிங் கூறினார்.

விவசாயிகள் போராட்டம்

மல்கித் கவுரின் குடும்பம் கடனில் சிக்கியுள்ளதாகவும், உதவி கேட்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

ஜனக் ராஜ் பர்னாலா, 55, கார் தீ விபத்தில் உயிருடன் எரிந்துபோனார்

ஜனக் ராஜ் பாரதிய கிசான் யூனியனின் (உக்ரஹான் பிரிவு) ஆர்வலராக இருந்தார். பகதூர்கர் - டெல்லி எல்லைக்கு அருகே அவர் தூங்கிக் கொண்டிருந்த கார் தீப்பிடித்து, அவர் உயிருடன் எரிந்து போனார்.

அவர் மெக்கானிக்காக இருந்தார். அவரது மகன் சாஹில் நவம்பர் 28 அன்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "அவர் இல்லாமல் எல்லாமே வெறிச்சோடி காணப்படுகிறது, குறிப்பாக அவர் வீட்டிற்கு வரும் நேரம் மனம் மிகவும் சங்கடப்படுகிறது," என்று குறிப்பிடுகிறார்.

"ஒரு மெக்கானிக் போராட்டத்தில் ஈடுபட்ட டிராக்டர்களை பணம் இல்லாமல் பழுதுபார்ப்பதாக உறுதியளித்தார். என் தந்தையும் அவருக்கு உதவத் தொடங்கினார். அவர் சைக்கிள்களை பழுதுபார்க்கும் பணியைச் செய்தார். ஆனால் அவருக்கு டிராக்டர் பழுதுபார்க்கும் வேலையும் சிறிது தெரியும்," என்று சாஹில் மேலும் கூறினார்

பீம் சிங், 36, சங்ரூர்- சிங்கு எல்லையில் மரணம்

டிசம்பர் 16ஆம் தேதி, அவர் சிங்கு எல்லையை அடைந்தார். அங்கு அவர் கால் தவறி ஒரு குழியில் விழுந்தார்.

தனது மாமனார், மாமியாருடன் பீம் சிங் வசித்து வந்ததாக விவசாய தலைவரான மஞ்சீத் சிங் தெரிவித்தார்.

"அவர் காலைக்கடன் கழிப்பதற்காகச் சென்றார். அங்கே அவர் கால் வழுக்கி விழுந்துவிட்டார். அவருடைய குடும்பத்திற்கு உதவுமாறு நாங்கள் அரசிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் சொன்னார்.

யஷ்பால் ஷர்மா, 68, ஆசிரியர், பர்னாலா

டோல் பிளாசாவில் நடந்த போராட்டத்தின் போது யஷ்பால் சர்மா மாரடைப்பால் இறந்தார்.

அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் விவசாயியும் கூட. அவர் வழக்கம் போல் அங்கு சென்றதாக அவரது மனைவி ராஜ் ராணி கூறுகிறார்.

"அவர் தனக்கு தேநீர் தயாரித்துக்கொண்டார். இப்படி நடக்கும் என்றும் அவர் உயிரற்ற உடலாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை," என்று கண்ணீர் மல்க ராஜ் ராணி குறிப்பிட்டார்.

"ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்"

டெல்லி முற்றுகைக்காக படையெடுக்கும் வெளி மாநில விவசாயிகள் - எல்லைகளில் பதற்றம்

"நான் நடமாடிக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுவேன், படுக்கையில் விழமாட்டேன் என்றும் அவர் சொல்லிக்கொண்டிருப்பார். கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். அவர் காரணமாக மக்கள் என்னை மதிக்கிறார்கள். (பிரதமர்) மோதி, போராடிவரும் விவசாயிகளின்பால் செவிசாய்ப்பார் என்றும் மேலும் பலர் இது போல உயிரிழக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்," என்று ராஜ் ராணி கூறினார்.

காஹன் சிங், 74, சாலை விபத்து, பர்னாலா

நவம்பர் 25ஆம் தேதி பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் உள்ள கனெளரி செல்ல அவர் தனது ட்ராக்டர் ட்ராலியை தயார் செய்து கொண்டிருந்தார். டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு விவசாயிகள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகக் கூடினர்.

அவர் 25 ஆண்டுகளாக போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார் என்று அவரது பேரன் ஹர்பிரீத் சிங் கூறுகிறார்.

"அவர் கிராமக்கிளையின் பொருளாளராக இருந்தார். அவர் தனது டிராக்டரை நிறுத்தி அதை மூடிவைக்க நீர்ப்புகா கவர் ஒன்றை வாங்கச்சென்றார். அந்த நேரத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஆனால் அவரைக்காப்பாற்ற முடியவில்லை. அரசு எங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தது. நாங்கள் ஒரு குடும்ப உறுப்பினருக்கு வேலை கோரியுள்ளோம்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல்ஜிந்தர் சிங் கில், 32, விபத்தில் மரணம்

லூதியானாவின் ஒரு கிராமத்தில் வசிக்கும் பல்ஜிந்தர், டிசம்பர் 1ஆம் தேதி டிராக்டர் எடுக்கச் சென்றார். ஆனால் அவர் விபத்தில் உயிரிழந்தார்.

"டிராக்டரை எடுத்துக் கொண்டு அப்பா ஏன் திரும்பி வரவில்லை என்று என் பேரன் கேட்கிறான். தந்தை எப்படி காயமடைந்தார் என்று கேட்கிறான்," என்று அவரது தாயார் சரஞ்சித் கவுர் கூறுகிறார்.

பல்ஜிந்தரின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு குடும்பம் பல்ஜிந்தரின் வருமானத்தில் மட்டுமே வாழ்ந்து வந்தது என்று சரஞ்சித் தெரிவித்தார். "இப்போது நானும் என் மருமகளும் மட்டுமே எஞ்சியுள்ளோம். இப்போது குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் யாரும் இல்லை," என்று அவர் துக்கம்பொங்க குறிப்பிட்டார்.

விவசாயிகள் போராட்ட களத்தில் தற்கொலை செய்துகொண்ட சந்த் ராம்சிங்

விவசாயிகள் போராட்டம் ஏன்? புதிய சட்டங்களில் என்ன பிரச்சனை?

இந்த மரணங்கள் நிகழ்ந்தபோதிலும், விவசாயிகளின் மனதைரியம் அப்படியே உள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிக்குறிப்பிடும்போது தியாகிகள், உயிர் தியாகம் போன்ற சொற்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

"இந்த தியாகங்கள் வீணாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கிறோம். இறுதி வெற்றி வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம்," என்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில், விவசாய தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் அறிவித்தார்.

போராட்டத்தில் மேலும் உயிர்தியாகங்கள் நிகழக்கூடும். ஆனால் தாங்கள் அதற்கும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மரணங்கள் போராடிவரும் விவசாயிகளின் மன உறுதியைக் கைவிடச்செய்துள்ளதா?

"நாங்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு விவசாயியை இழந்து கொண்டிருக்கிறோம். இதனால் நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனால் நிச்சயமாக எங்கள் மன உறுதி பலவீனமடையவில்லை. மாறாக, ஒவ்வொரு மரணத்திலும் எங்கள் மன உறுதி மேலும் பலம்பெறுகிறது," என்று விவசாயி தலைவர் ஹரிந்தர் கவுர் பிந்து பிபிசியிடம் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்

டெல்லி - உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஸிபூர் எல்லை நெடுஞ்சாலை நடைபாதையில் உறங்கும் விவசாயிகள்

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கை பிபிசி தொடர்பு கொண்டபோது, "தங்கள் வாழ்வாதாரத்திற்காக குளிர்காலத்தில் போராடவேண்டிய கட்டாயத்தில் உள்ள விவசாயிகளின் மரணத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். மத்திய அரசின் நீக்குபோக்கற்ற நிலைப்பட்டையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதுவரை பஞ்சாபில் 20 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் 33 பேர் டெல்லியின் எல்லையில் இறந்துள்ளனர்," என்று கூறினார்

"இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இவையெல்லாம் முடிவுக்கு வர வேண்டும். விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு பிரச்சனையை விரைவில் தீர்க்குமாறு நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் மேலும் உயிர்தியாகங்களை நாடும், தனது மாநிலமும் தாங்காது," என்று அவர் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி