இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு தீப்பந்தம் ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தேசிய மனித உரிமைகள் தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்லியாஸ், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சலீம்கான் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது சுகாதார நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி, புத்தளம் நகர் ஊடக தபால் நிலைய சுற்றுவட்டம் வரை சென்றது. இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களையும், மாதிரி ஜனாஸா ஒன்றையும் கையில் ஏந்திய நிலையில் பேரணியாக சென்றனர்.

இதன்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழக்கும் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் போது, இலங்கையில் மாத்திரம் அனுமதி மறுக்கப்படுவது பெரும் அநியாயமாகும் எனவும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி