இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வியாழக்கிழமை 15ஆவது நாளாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்து விட்டதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக பல்வேறு சமரச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அவருடன் சென்ற தலைவர்களின் வாகனங்களை சிலர் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஈடுபட்டது யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அந்த சம்பவத்துக்கு டெல்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோமர், "மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு எந்த தொடர்பும் இல்லை என விவசாயிகளிடம் தெரிவித்து விட்டோம். இதில் திறந்த மனதுடன் பேச அரசு தயாராகவே உள்ளது" என்று கூறினார்.

"மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, விவசாயம் மாநில விவகாரமாக உள்ளபோது அது தொடர்பான சட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் சில பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், விவசாய பொருட்களின் வர்த்தகம் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தினோம்," என்று தோமர் தெரிவித்தார். 

விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்த பிறகும் அவர்கள் விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவதிலேயே உறுதி காட்டுகிறார்கள். ஆனால், சட்டத்தில் உள்ள பிரச்சினைகளை விரிவாக கூறினால், அவற்றை களைய தயாராக நாங்கள் உள்ளபோது சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என ஏன் அவர்கள் வலியுறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார் நரேந்திர சிங் தோமர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மூலம் விவசாய நிலங்களை கார்பரேட்டுகள் ஆக்கிரமித்து விடுவார்கள் என்பது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம்சாட்டிய அவர், கான்ட்ராக்ட் விவசாயம் எனும் நடைமுறை குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள நடைமுறைதான் என்று கூறினார். அந்த மாநிலங்களில் எல்லாம் விவசாயிகள் அச்சம் தெரிவிப்பது போல எந்த பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை என்று தோமர் விளக்கினார். 



"ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்"
விவசாயிகள் போராட்டம்- விட்டுக்கொடுக்காத மத்திய அரசு, எதிர்ப்புக்குரலை பலவீனப்படுத்த வியூகம்
விவசாயிகள் போராட்டம்: நாங்கள் என்ன தீவிரவாதிகளா? ஆவேசம் அடையும் அய்யாக்கண்ணு 

ஒருவேளை விவசாயிக்கும் அவரது நிலத்தில் வேளாண் செய்யும் பதப்படுத்துதல் நிறுவனத்துக்கும் ஒத்துவராவிட்டால் தனது கருவிகளை அகற்றிக் கொண்டு அந்த நிறுவனம் செல்வதற்கான வாய்ப்புகளை தற்போதைய சட்டம் வழங்கியுள்ளது என்றும் இதில் கவலைப்பட ஏதுமில்லை என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். 

விவசாயிகளின் நலன்கள் தொடர்பாக சுவாமிநாதன் ஆணையம் தயாரித்த அறிக்கை 2006ஆம் ஆண்டிலேயே வந்தபோதும், அதன் பரிந்துரைகள் மோதி அரசு ஆட்சிக்கு வந்த பிறகே அமுல்படுத்தப்பட்டு வருகின்றன என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். 

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "தனியார் சந்தையில் தங்களுடைய பொருட்களை விற்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என சில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை கொண்டுள்ளார்கள். ஆனால், அந்த அச்சம் தேவையற்றது. கட்டாய வர்த்தகத்துக்கான எந்த ஒரு பிரிவும் புதிய சட்டத்தில் கிடையாது" என்று தெரிவித்தார். 

நாடு தழுவிய அளவில் வரும் 12 மற்றும் 14ஆம்தேதிகளில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கங்கள் அறிவித்த நிலையில் மத்திய அமைச்சர்கள் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். 

விவசாயிகளுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக அதிக தகவல்களை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில், அந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்களை மத்திய அரசு வியாழக்கிழமை வெளிப்படுத்தியிருக்கிறது. 

இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கெடுக்க நாடு தழுவிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகருக்கு வந்தவாறு உள்ளனர். 

விவசாயிகள் தரப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பது தெளிவாகாத நிலையில், இந்த பிரச்சினையை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

15ஆவது நாளாக போராட்டம் 

தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவும் வேளையில் இரவு, பகலாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இதேபோல, டெல்லி உத்தர பிரதேச எல்லையை இணைக்கும் காஸிபூர் நெடுஞ்சாலை, டெல்லி, ஹரியாணாவை இணைக்கும் குருகிராம் நெடுஞ்சாலை ஆகிய இடங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

கூட்டமாக டெல்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகிறார்கள். இதனால், தனித்தனி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் நடந்தவாறும் வெவ்வேறு வழிகளில் விவசாயிகள் டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் திரண்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தவாறு உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி