ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை
உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விருதைப் பெற்றனர். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மாறாத அன்புக்கு உரியவராக அஜித் இருப்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.
சூப்பர் ஸ்டார்களில் தனித்து நிற்பவர்
தமிழ் சினிமா எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை கண்டிருக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தனித்து இருப்பவர் நடிகர் அஜித். அப்படி அஜித் தனித்திருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது. ரசிகர்கள் சந்திப்பை அஜித் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரை திரையில் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.
ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தல என அழைக்க வேண்டாம் என அஜித் அறிவித்தபோதெல்லாம் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை.
அப்படி என்ன செய்துவிட்டார் அஜித்?
அஜித் திரைத்துறைக்குள் வந்ததே ஒரு விபத்துதான். ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு வந்த அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட, மறுபக்கம் திரைத்துறைக்கான கதவும் திறந்தது.
கதாநாயகனாக தெலுங்கு படமான பிரேம புஸ்தகத்தில் அஜித் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த அமராவதிதான் முதலில் ரிலீஸ் ஆனது.
அமராவதி ரிலீஸுக்கு பின் விபத்து ஒன்றால் ஒன்றரை ஆண்டுகள் அவர் ஓய்வெடுக்க நேர்ந்தது. பவித்ரா படம் அவருக்கான ரீ-என்ட்ரியாக அமைந்தது. ஆனாலும், அஜித்துக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது வசந்த் இயக்கிய ஆசை திரைப்படம்தான். பின்னர் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை என வரிசையாக தோல்வி படங்கள்.
1996 ஜூலையில் அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான காதல் கோட்டை வெளியானது. அகத்தியனின் புதுமையான திரைப் பாணி ரசிகர்களை கவர, படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு தேசிய விருதுகளையும் குவித்தது.
அடுத்து மீண்டும் வரிசையாக தோல்விப் படங்கள். அமிதாப் பச்சன் தயாரிப்பில் அஜித், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த உல்லாசம் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த படமும் தோல்வியை தழுவியது.
ஒரு மெகா ஹிட் கொடுப்பது, அடுத்து வரிசையாக தோல்விப்படங்களை கொடுப்பது என அஜித்தின் தொடக்க கால திரைப்பயணம் சிறிய ஏற்றம், பெரிய இறக்கம் நிறைந்ததாக இருந்தது.
1999இல் வெளியான வாலி திரைப்படம்தான் திரைத்துறையில் அவரை தவிர்க்க முடியாததாக மாற்றியது. அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பெரிய பாராட்டைப் பெற்றதோடு அஜித்துக்கான முதல் ஃபிலீம்ஃபேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது.
தொடக்கத்தில் அஜித்துக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகர்கள் இருந்தனர். ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், முகவரி, அவள் வருவாளா போன்ற படங்கள் அவரை ஒரு சாக்லேட் பாய் ஹீரோவாக பெண்களிடம் கொண்டுபோய் சேர்த்தன.
2001இல் வெளியான தீனா அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அஜித்தே வேண்டாம் என்று துறந்தாலும் அவரது ரசிகர்களால் விரும்பப்படும் தல என்ற பட்டம் அஜித்துக்கு கிடைத்தது இந்த படத்தில்தான்.
அதே ஆண்டில் அஜித்குமார் பல்வேறு கெட்டப்களில் நடித்த சிட்டிசன் திரைப்படம் வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், பெரிய வெற்றியைத் தரவில்லை என அதன் தயாரிப்பாளர் நிக் ஆட்ஸ் சக்ரவர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அசோகா, ரெட், ராஜா என அஜித் நடித்த அடுத்தடுத்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சொதப்ப அவரது கவனம் பதின் பருவ கனவு மீது திரும்பியது. அதுதான் ரேஸ்.
32 வயதில் கார் ரேஸ்
தன்னுடைய பதின் பருவ கனவு குறித்து அஜித் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது , ''ஒரு கட்டத்தில் எனது திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனக்குப் பிடித்த ஒன்றைச் செய்ய வேண்டுமெனத் தோன்றியது. இம்முறை கார் ரேஸிங்கில் கலந்து கொண்டேன். மிகவும் தாமதமாக 32 வயதில் கார் ரேஸிங் துறைக்குள் நுழைந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்தேன்'' என்றார்.
2002ஆம் ஆண்டு, ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித், அதில் நான்காம் இடம் பிடித்தார்.
பிறகு 2003ஆம் ஆண்டு நடந்த ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா சாம்பியன்ஷிப்பில் (Formula BMW Asia) கலந்துகொண்ட அவர், அதில் 12-ஆம் இடத்தைப் பிடித்தார். பிறகு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் ஃபார்முலா 3 நேஷனல் கிளாஸ் (British Formula 3 - National Class) பந்தயத்தில் கலந்துகொண்டு 7-வது இடம் பிடித்தார்.
இதற்கு பிறகு ஆறு ஆண்டுகளுக்கு மேல் நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் இருந்து விலகியே இருந்தார்.
அதற்கு நடுவே 2007இல் அளித்த பேட்டியில், "நான் கார் ரேஸிங்கில் இருந்தபோது அதை யாருமே கேட்கவில்லை அல்லது என்னை ஊக்குவிக்கவில்லை. அதை விட்டபிறகு ஏன் விட்டீர்கள் எனக் கேட்கிறார்கள். எனது ரசிகர்கள் என்னிடமிருந்து நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகவே தொடர்ந்து ரேஸிங்கில் ஈடுபடுவதை விட்டேன்" என்று கூறியிருப்பார்.
பிறகு 2010ஆம் ஆண்டு, எஃப்ஐஏ ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப் (FIA Formula Two Championship) சீசனில் பங்கேற்றார் அஜித். ஏப்ரல் 18 முதல் செப்டம்பர் 19 வரை ஐரோப்பாவில் இந்தத் சாம்பியன்ஷிப் சீசன் நடைபெற்றது.
தொடர் தோல்வியும் திருப்புமுனை தந்த பில்லாவும்
2005 முதல் 2006 வரை 4 திரைப்படங்களில் அஜித் நடித்திருந்தார். இதில், வரலாறு தவிர ஜி, பரமசிவன், திருப்பதி ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன.
வரலாறு படத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. அந்த படம் தொடங்கும்போது அஜித் சற்று பருமனாக இருந்தார். சில ஆண்டுகளில் அஜித் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தை கொண்டு வந்தார். இதனால், அந்த படத்தில் இரு தோற்றமும் இடம் பெற்றிருக்கும்.
2007இல் அவர் நடித்து வெளியான ஆழ்வார் படுதோல்வி அடைந்தது, அடுத்து வெளியான கிரீடமும் அஜித்துக்கு தேவையான வெற்றியை பெறவில்லை. இனி அஜித் சினிமா கேரியர் முடிந்ததா என்று பேச்சு பரவியபோதுதான், அஜித்தின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமான பில்லா ரிலீஸ் ஆனது.
அதுவரை பார்க்காத ஸ்டைலான ஒரு கேங்ஸ்டராக அஜித் திரையில் தோன்றி இருப்பார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அடுத்த நான்கே ஆண்டுகளில் அதைவிட ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் அஜித். அதுதான் அவரின் 50-வது படமான மங்காத்தா.
அஜித் முழுக்க முழுக்க வில்லனாகவே நடித்திருந்தாலும் 'விநாயக் மகாதேவை' ரசிகர்கள் கொண்டாடினர். இதற்கு முன்பு அவரது திரைப்படங்கள் வசூலித்த கலெக்சன் அனைத்தையும் இந்த படம் விஞ்சியது.
2012இல் வெளியான பில்லா 2 பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்தாலும் பலரின் விருப்பமான படங்களில் இந்த படத்துக்கு எப்போதும் இடம் உள்ளது.
2013 முதல் 2025 வரை ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 11 படங்களில் அஜித் நடித்திருக்கிறார்.
இதில் விவேகம், வலிமை, விடாமுயற்சி ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டன.
அதேநேரம், விடாமுயற்சி மற்றும் நேர்கொண்ட பார்வையில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் பாராட்டைப் பெற்றன.
அஜித் தவறவிட்ட படங்கள்
அஜித் தோல்வி படங்களை கொடுத்திருந்த காலகட்டத்தில் அவர் வேண்டாம் என்று விலகிய மற்றும் பாதியில் கைவிடப்பட்ட பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தன.
நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் அஜித். படப்பிடிப்பும் நடந்த நிலையில், பாதியில் அவர் விலகினார்.
வாலி ஹிட்டை தொடர்ந்து நியூ படத்துக்காக அஜித்தை அணுகினார் எஸ்.ஜே. சூர்யா. அஜித், ஜோதிகா நடிப்பதாக போஸ்டர் வெளியானது. ஆனால், பின்னர் எஸ்.ஜே சூர்யாவே கதாநாயகனாக அறிமுகமானார்.
பாலாவின் நந்தா, நான் கடவுள் படங்களில் முதல் சாய்ஸ் அஜித்தான். ஆனால், இந்த படங்களும் பின்னர் முறையே சூர்யா, ஆர்யா நடிப்பில் வெளியாகின.
இதேபோல், சூர்யாவுக்கு பெரிய பிரேக் கொடுத்த கஜினியும் அஜித் நடிக்க வேண்டியது. மிரட்டல் என்ற பெயரில் படத்தின் போஸ்டர் வெளியானது. எனினும் இந்த படமும் முழுமை பெறவில்லை.
இதுபோக, சரண் இயக்கத்தில் இருமுகம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் காங்கேயன், இதிகாசம், மகா என பல படங்களில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது.
அஜித்தும் சர்சையும்
தற்போது ஊடகங்களிடம் விலகி இருக்கும் அஜித் தனது தொடக்க காலத்தில் ஊடகங்களிடம் நெருக்கத்துடன் இருந்தவர். மனத்தில் பட்டத்தை துணிச்சலாக பேசக்கூடியவர். ஒரு பேட்டியில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் குறிப்பிட, அது சர்ச்சையானது.
இதேபோல் 2010இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு திரைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட அஜித், சினிமா கலைஞர்களை கட்டாயப்படுத்தி இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க வைப்பதாகவும், நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்றும் பேசியிருந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் பின்னர், கருணாநிதியை அஜித் நேரில் சந்தித்து பேச இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதேபோல் அரசியல் சர்ச்சையும் அஜித்தை தொடர்ந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவானவர் என அவர் மீது சாயம் பூசப்பட்டது. இதேபோல் 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அஜித் ஆதரவளிப்பதாக வதந்தி பரவியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அஜித், ''என் தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் ஆசையில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு'' என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மீண்டும் கார் ரேஸ் மீது திரும்பிய ஆர்வம்
கார் ரேஸில் இருந்து விலகியிருந்த அஜித்குமார் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து 2024இல் மீண்டும் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்தார்.
சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற அணியைத் தொடங்கினார். இந்த அணியும் பல்வேறு வெற்றிகளை பெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தை சந்தித்தார். பின்னர் ஸ்பெயினில் அவர் ரேஸில் பங்கேற்றபோது மற்றொரு விபத்தை சந்தித்தார். ரேஸ்களால் அஜித் விபத்துகளை சந்திப்பது புதியதன்று. பல்வேறு விபத்துக்கள், பல்வேறு அறுவை சிகிச்சைகளை அவர் எதிர்கொண்டிருந்தாலும், ரேஸ் மீதான அவரது ஈர்ப்பு இன்றும் தொடர்கிறது.
சினிமா, ரேஸ் இரண்டையும் தாண்டியும் அஜித்துக்கு வேறு சிலவற்றின் மீதும் ஆர்வமும் இருந்தது.
துப்பாக்கிச் சுடுதலில் அஜித்துக்கு அதிக ஆர்வம் உண்டு. 2022-ல் தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர் 4 தங்கப் பதக்கங்களையும் வென்றிருந்தார். இதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவுக்கு டிரோன் தொழில்நுட்பம் தொடர்பாக அஜித் ஆலோசகராக இருந்தார். பின்னால், இந்த குழுவும் பல்வேறு பரிசுகளை வென்றது. புகைப்படம் எடுப்பதில் அஜித்துக்கு ஆர்வம் உண்டு.
அஜித்தும் ரசிகர்களும்
ரசிகர்கள் விஷயங்களில் அஜித் அதிகம் கவனமாக இருக்கக்கூடியவர். 'முதலில் குடும்பத்தை பாருங்கள், நேரம் இருந்தால் என் படத்தை பாருங்கள்' என்பதுதான் ரசிகர்களுக்கு அவர் சொல்வது.
2011ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதை பிறந்த நாள் பரிசாக அஜித் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், "நான் என்றுமே என் ரசிகர்களை எனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதில்லை. என் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பிற்காக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்" எனக் கூறியிருந்தார்.
அவரது மெகா ஹிட் படமான மங்காத்தா அப்போதுதான் ரிலீஸ். திரைத்துறையின் உச்சத்தில் இருக்கும்போதே தனது ரசிகர் மன்றத்தை அவர் கலைத்தார். ஆனாலும், அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதேபோல், அல்டிமேட் ஸ்டார் பட்டம், தல என்ற அடைமொழியை துறப்பதாக அஜித் அறிவித்தபோதும் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை.
'தோல்வி படம் கொடுத்தாலும் அடுத்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் இருக்கிறதே, அப்படி ரசிகர்களுக்கு நீங்கள் செய்தது என்ன?' என்று ஒருமுறை அஜித்திடமே இது குறித்து கேள்வி எழுப்பட்டது.
அதற்கு அஜித் கூறிய பதில், ''போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அதிக தோல்வி படம் கொடுத்த நடிகனாக நான் தான் இருப்பேன். ஆனாலும் ரசிகர்கள் அளவுகடந்த அன்பை காட்டுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாத அன்பை காட்டுகிறார்கள்'' என்றார்.
- பிபிசி தமிழ்