குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு டிசம்பர் முதலாம் திகதியான நேற்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

"கடந்த 30ம் திகதி இரவு மஹர சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற கொலைகள் குறித்து நியாயமான விசாரணைகளுக்கான கோரிக்கையை முன்வைத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளோம்.” என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் உட்கொள்ள எவ்வித உணவு இன்றியும், குறைந்த பட்சம் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கைதிகள் உள்ளனர். கூடுதலாக, இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு இதுவரை ஒரு மருந்தேனும் வழங்கப்படவில்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்றுநோய் எவ்வாறு நுழைந்தது என்ற சந்தேகத்தையும் சுதேஷ் நந்திமல் எழுப்பியுள்ளார்.

" முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார குறிப்பிடுவது போன்று, இந்த கைதிகள் ஒரு நிறுவனத்திற்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. . அவர்களை அடிமை பணிக்கு அழைத்துச் சென்று, கொரோனாவுடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது."

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாட்டை கையளித்த சந்தர்ப்பத்தில், சட்டத்தரணிகளான நாமல் ராஜபக்ச மற்றும் அச்சலா செனவிரத்ன ஆகியோர் உடன் இருந்தனர்.

04 இணை விசாரணைகள்

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு பக்கங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இணை அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதற்கமைய, மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தலைமையிலான குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, அமைச்சு மட்டத்தில் விசாரணை செய்ய இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் இரண்டாவது குழுவை நியமித்துள்ளார்.

மூன்றாவது குழுவாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நீதி அமைச்சர் நியமித்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டுகிறார்.

இந்த மூன்று விசாரணைகளுக்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவு நான்காவது குழுவாக ஒரு சுயாதீன விசாரணையாக ஆரம்பித்துள்ளது.

மோதலுக்கான காரணங்கள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதே இந்த விசாரணைகளின் நோக்கமென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மருந்துக் களஞ்சியத்தின் மருந்துகள்

இதற்கிடையில், மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருந்து களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள சில மருந்துகள் கலகக்காரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் சிறைக்குள் இருக்கும் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள கைதிகளாலேயே இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக, இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்திற்கு சிக்சையளிக்கப் பயன்படும் மற்றும் மயக்க மருந்துகள் உள்ளிட்ட சுமார் சுமார் 21,000 மருந்து வில்லைகள் களஞ்சியத்தில் காணப்பட்டதாகவும், தற்போது காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சில கைதிகள் இதனை உட்கொண்டுள்ளதோடு, இதன் காரணமாக சில கைதிகள் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இவ்வளவு தொகை மருந்து வில்லைகள் ஏன் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்காக கைதிகள் களஞ்சியசாலையை  உடைத்து மருந்தினை தேடினார்களா? என சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இரண்டு சிறை அதிகாரிகள் உட்பட 108 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ராகம வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கைதிகளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web