நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விடயத்தை "தவறான செய்தி புனைகதை" என கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி கோதபய ராஜபக்சவின் சமீபத்திய உத்தரவை அறிவித்த பாதுகாப்பு செயலாளர், இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

”இது போன்ற முயற்சிகளை தடுக்க முப்படையினரும் பொலிஸாரும் விழிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணித்துள்ள அதேவேளை விமானப்படை தமது வளங்களை பயன்படுத்தி வான்வழி கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்” என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாரஹன்பிட்டவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் இன்று இடம்பெற்ற மாவட்டச் செயலாளர் அதிபர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதுடன் "எமது எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

வனவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் இயற்கை வளங்கள் அழிவடைந்து செல்வதற்கு எதிராக செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தேக்கு மரக் கடத்தல் மோசடித் தொடர்பில் அறிக்கையிட்ட இரண்டு ஊடகவியலாளர்கள் ஒக்டோபர் 12ஆம் திகதி மரக் கடத்தல்காரர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

விசாரணையின் போது, கணபதிபிள்ளை குமணன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள நாகன்சோலை பிரதேசத்தில் 180 ஏக்கர் வனத்தை மரக் கடத்தல்காரர்கள் அழித்துள்ளனர்.

எவ்வாறெனினும் குற்றத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காண பொலிஸார் தவறியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த செய்திகளை ஜனாதிபதி சமீபத்தில் மறுத்திருந்ததோடு, ”தவறான செய்திகளை பரப்புவதற்கும் சமூகமயமாக்குவதற்குமான ஒரு நடவடிக்கை” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், காடழிப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவுடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தகவல்களை வழங்க நான்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமைச்சரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கமான 0707-555666 இற்கு வட்ஸ்அப் தகவல், குறுந்தகவல் அல்லது காணொளிகளை அனுப்புமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தகவல்களை வழங்க, சுற்றாடல் அமைச்சு – 1991, மத்திய சுற்றாடல் அதிகாரசபை – 1981, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் – 1921 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி