அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்காக முன்னைய அரசாங்கம் 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தாலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”அன்னையர் முன்னணி” அமைப்பில் இணைந்து செயற்படும், மரணச் சான்றிதழ்களை தம்வசம் வைத்திருக்கும் பெரும்பாலான காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பிலேயே பிரதமர் அவதானம் செலுத்தத் தவறியுள்ளதாக காணமற்போனோரின் குடும்ப ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச 1989 இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தலைமையில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பே ”அன்னையர் முன்னணி” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அரசியல் கட்சிகளுக்கும், இந்த அமைப்பின் தலைவர் சிரேஷ்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 6,000 ரூபாயை வழங்குவதற்காக, முன்னைய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக சான்றிதழ் பெற்றவர்களுக்கு 2019 செப்டம்பர் 18 அன்று பணம் செலுத்த அமைச்சரவை இணக்கம் தெரிவித்ததாக மனித உரிமை ஆர்வலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 டிசம்பர் 31 வரை 153 குடும்பங்களுக்கு கொடுப்பனவு (11 மில்லியன் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரிட்டோ பெர்னாண்டோ, ”கண்ணால் காணமுடியாதவர்கள் குறித்த சான்றிதழை வைத்திருக்கும்” ஒரு சிலருக்கு பணம் வழங்கப்பட்டதோடு, மரணச் சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு 2010ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க தற்காலிக பதிவுச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில், இறப்புக்கான காரணம் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பங்களுக்கும் மாதாந்தம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,200 உறுப்பினர்கள் பாதயாத்திரையாக வந்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று (பெப்ரவரி 14) இந்த மாதாந்த கொடுப்பனவுக்கான கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்தனர்.

அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் நீதி அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதால், நீதி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிவனங்களுடன் கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்பு ஊடாக தொடர்பு ஏற்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை பதிலும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 14ஆம் திகதி, மகஜர் ஒப்படைக்கப்பட்டபோது பிரதமரின் விசேட பிரதிநிதியாக முன்னிலையான, அமைச்சர் காமினி லொகுகே, காணாமல் போனவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இயலுமான அனைத்தையும் செய்யும் என தெரிவித்ததாக, பிரிட்டோ பெர்னாண்டோ பிரதமருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1989 கலவரத்தின் போது காணாமல் போனவர்கள் விடயத்தில் பங்களிப்பு செய்தவர் என, மஹிந்த ராஜபக்சவை மேற்கோள் காட்டியுள்ள, மனித உரிமை ஆர்வலர், இந்த நேரத்தில் நிதி அமைச்சராக காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையானது, 89 காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ச முன்னின்ற விடயத்தை பின்னடையச் செய்வதாக அமைந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

"நீங்கள் தெற்கில், ஒரு காலகட்டத்தில் காணாமல் போன குடும்பங்களுக்கு ஏதாவது செய்யும் வாய்ப்பை இழந்துவிட வேண்டாம் என இறுதியாக நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்."

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சிங்கள அல்லது தமிழ் வம்சாவளியா என்பதை பொருட்படுத்தாமல் காணாமல் போனவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமரிடம் பிரிட்டோ பெர்னாண்டோ அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி