பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், வாக்குமூலம் வழங்கும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த பிள்ளையான், அன்றைய தினமே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த பொதுத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (24) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி சார்பில், இவ்வழக்கில் ஆஜரான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிள்ளையான் உட்பட சந்தேகநபர்கள் ஐவருக்கும் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

ஆயினும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் பிணை வழங்கப்பட்டது
இதன்போது, வழக்குடன் சம்பந்தப்படட ஐவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கம், மற்றும் இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு டிசம்பர் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு, பிள்ளையானின் விடுதலையையடுத்து, நீதிமன்றத்துக்கு முன்னால் பெருமளவான அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

அவரது ஆதரவாளர்களால், மட்டக்களப்பு நகரில் பட்டாசுகளும் கொளுத்தப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி