முரட்டு மீசை, கம்பீர தோற்றத்துடன் நகைச்சுவை கலந்து திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை இரு 8.15 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் உறுதிப்படுத்தினார். 

தமிழில் அவர் சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக நடித்து அந்த படத்தின் நகைச்சுவைக்கு மெருகூட்டியிருந்தார் தவசி.

இதே போல ரஜினி முருகன் படத்தில் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக நடித்தார். அழகர் சாமியின் குதிரை படத்தில் உள்ளூர் கோடாங்கியாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் தவசி.

கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது விபத்தில் சிக்கிய தவசி, பொது முடக்கத்தால் நாடே முடங்கியபோது, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் தவசி. அவருக்கு புற்று நோய் தீவிரம் அடைந்ததால் கம்பீரத்துடன் இருந்த அவரது உடல் மெலியத் தொடங்கியது. நாளடைவில் சிகிச்சை தேவைக்காக மொட்டை அடித்து மீசை ,தாடி வழிக்கப்பட்ட நிலையில் எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சி அளித்தார் தவசி.



இந்த நிலையில், மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இலவச சிகிச்சை தருவதாக எம்எல்ஏ சரவணன் தெரிவித்திருந்த நிலையில், நிதியுதவியின்றி தவிக்கும் தனக்கு உதவ முன்வருமாறு அழுது கொண்டே வேண்டுகோள் விடுக்கும் காணொளியை சில வாரங்களுக்கு முன்பு தவசி வெளியிட்டார்.

அவரது தோற்றதைக் கண்டு தமிழ் திரையுலகமும் அவரது ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவருக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு ஆகியோர் உதவி செய்தனர். இந்த நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தவசியின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய தவசி, கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தார். பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் அவர் பேசிய "கருப்பன் குசும்புக்காரன்" என்ற வசனம் தான் அனைவரின் நினைவிற்கு வந்து தவசியின் நகைச்சுவை உணர்வை ஞாபகப்படுத்தி வந்தது.

திரையில் தனக்கென ரசிகர் வட்டத்தை கொண்ட நிலையில், அனைவரையும் சிரிக்க வைத்த தவசி, கடைசி காலத்தில் அழுது கொண்டே உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவலால் அவரது ரசிகர் வட்டம் மிகவும் கவலையில் ஆழ்ந்திருக்கிறது.

தவசி தமிழக அரசுக்கு விடுக்கும் கடைசி வேண்டுகோள்

தமிழ்த் திரைப்பட உலகில் தன்னைப் போல பல துணை நடிகர்கள் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சிகிச்சைக்கு கூட வசதியின்றி தவித்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு பிபிசிக்கு அளித்த பேட்டியில் தவசி கூறியிருந்தார்.

அதில், தமிழ் துணை நடிகர்களுக்கு மருத்துவ வசதி வழங்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களின் துயர் துடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தனது வாழ்வின் கடைசி நாட்களில் அவர் அழுது கொண்டே உயிரிழந்ததாக தவசியின் குடும்பத்துக்கு நெருக்கமான உறவினர்கள் தெரிவித்தனர்.

தவசியின் உடல் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு திங்கட்கிழமை இரவு கொண்டு செல்லபட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி