மாவீரர் தின நிகழ்வுகளை பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை விண்ணப்பங்களை யாழ்.மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால், அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களைத் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது. ஆனால், கூட்டாகச் சேர்ந்து மாவீரர் தினம் என்ற போர்வையில் செய்வது தேசிய பாதுகாப்போது சம்பந்தப்பட்ட விடயம் எனவும், அதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தனது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.

மனுதாரர்களான வல்வெட்டித்துறை - கம்பர்மலையைச் சேர்ந்த சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் அல்வாயைச் சேர்ந்த வேலும்மயிலும் ஆகியோரால் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக குறித்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, இந்த விடயம் இன்று காலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

எதிர் மனுதாரர்கள் சார்பாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

எதிர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், மாகாண மேல் நீதிமன்றுக்கு இந்த வழக்கை நடத்துவதற்கு நியாயாதிக்கம் இல்லை என ஆட்சேபனை எழுப்பியதோடு, மாகாண சபை நிரலில் இல்லாத மனுக்கள் இவை என்றும், இந்த மனுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், ஊறு விளைவிப்பதாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், கட்டளை வழங்கப்பட்டால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும்,மத்திய அரச சட்டத்தின் கீழும் இந்த மனுதாரர்கள் குற்றங்களைப் புரிவார்கள் எனவும் நீதிமன்றில் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்து விண்ணப்பம் சம்பந்தமான உத்தரவை மதியம் 2 மணிக்கு வழங்குவதாகத் தெரிவித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் விடயத்தை ஒத்திவைத்தார்.

மீண்டும் பிற்பகலில் 2 மணிக்கு கட்டளை வழங்குவதற்காக, மன்று கூடியபோது, இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால்,அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது எனவும், கூட்டாக பொது இடத்தில் நினைவுகூரலை மேற்கொள்வது தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்றும், அதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தனது தீர்ப்பின்போது தெரிவித்து எழுத்தாணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹண மன்றுக்கு வருகைதந்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி