அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம்.

இந்தத் தேர்தலை consequential தேர்தல் என்று அழைக்கிறார்கள். அதாவது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் என்கிறார்கள்.

வெள்ளை மாளிகையில் கொரோனா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ள நிலையில், வெள்ளை மாளிகை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் மிடோஸ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை அமெரிக்காவில் சுமார் 97 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கொரோனா பரவல் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது.

டிரம்ப் உரையில் சொல்லப்பட்டவை உண்மையா?

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி வெள்ளிக்கிழமை பேசிய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் எந்த ஆதாரமும் தராமல் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

பைடன் பேசியது என்ன?

பைடன் தனது உரையின்போது அதிபர் டிரம்ப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

74 மில்லியன் வாக்குகளுக்கும் மேல் நாம் பெற்றுள்ளோம். அமெரிக்க வரலாற்றில், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேறு யாரையும்விட இது அதிகமான வாக்குகள்.

இந்த முடிவுகள் நான் அதிபராவதற்கு மக்கள் கொடுத்துள்ள தெளிவான ஆணை. உங்கள் ஒவ்வொருவரின் வாக்கும் எண்ணப்படும். அதைத் தடுக்க யார் எவ்வளவு முயன்றாலும், அது நடக்க நான் விடமாட்டேன்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தாம் பதவிக்கு வந்த முதல் நாளில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பைடன் உறுதியளித்தார்.

கொரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி, தேர்தல் பிரச்சாரத்தில் சிக்கல் ஆகியவற்றால் நாட்டில் ஆழமான பிளவு உண்டாகியுள்ளது.

நமக்கு தீவிரமான பிரச்சனைகள் உள்ளன. பாடுபடுத்தும் மோதல்களில் வீணாக்க நம்மிடம் நேரம் இல்லை.

நாம் 21ஆம் நூற்றாண்டை உரிமை கொண்டாட முடியாது என்பதற்கு காரணங்கள் இல்லை. நாம் யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் உரை

அதிபர் டிரம்பை விட கூடுதல் தேர்தல் சபை இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், நாட்டு மக்களுக்கு சற்று முன்பு உரையாற்றியுள்ளார்.

"நாம் போட்டியாளர்கள்தான்; எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் அமெரிக்கர்கள்," என்று அவர் பேசினார்.

இந்த நாடே நம்முடன் இருக்கும் சூழலில், தெளிவான பெரும்பான்மையுடன், நாம் இந்தப் போட்டியில் வெல்லப்போகிறோம் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நெருக்கமான போட்டி: அமெரிக்க வாழ் தமிழர்கள் கூறுவதென்ன?

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் குடியரசு கட்சியின் வேட்பாளர் அதிபர் டிரம்பை விட பெரும் அளவிலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.

ஆனால், போட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது ஏன் என்று அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் பிபிசியிடம் கூறினார்கள்.

'கோபத்தில் டிரம்ப்'

தொலைக்காட்சிகளிலும், தெருக்களிலும் தமக்கு ஆதவாக சிலர் மட்டுமே வந்துள்ளதால், தமது கூட்டாளிகள் மீது டிரம்ப் கோபமாகவும், ஏமாற்றம் அடைந்தும் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளியன்று டிரம்ப் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததாகவும், நிறையத் தொலைபேசி அழைப்புகள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அதிபரின் 'ஓவல் ஆஃபீஸ்' அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றில் தமது நேரத்தை செலவிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து டிரம்ப் குழுவினர் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது குறித்த தெளிவான உத்திகளை தெரிவிக்கவிலல்லை.

சில மாதங்களுக்கு முன்னரே இந்த உத்திகளைத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று கருதும் அவரது குழுவினர் சிலர், இதுகுறித்து அதிபரிடம் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை.

பென்சில்வேனியாவில் பைடன் வென்று, டிரம்ப் மற்றும் பைடன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் வேறுபாடு மிகவும் குறைவாக இருந்தால், டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது அவருக்கு பலன் தரக்கூடும்.

பைடன் பெரிய அளவில் வென்றால் இது பலனளிக்காது. அதிபரின் சட்டக் குழு இந்த விவகாரத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறது.

டிரம்ப்

வெள்ளை மாளிகையில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்ததுதான் டிரம்ப் கடைசியாக பொது வெளியில் தோன்றிய நிகழ்வு. வெள்ளை மாளிகையில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்ததுதான் டிரம்ப் கடைசியாக பொது வெளியில் தோன்றிய நிகழ்வு.

பென்சில்வேனியாவில் பைடன் முன்னிலை

பென்சில்வேனியாவில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு மேல் பெறப்படும் தபால் வாக்குகளைத் தனியாக வைத்திருக்குமாறும், அவை தனியாகவே எண்ணப்படவேண்டும் என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி சாமுவேல் அலிட்டோ ஆணையிட்டுள்ளார்.

தாமதமாகப் பெறப்படும் வாக்குகளை எண்ணக்கூடாது என்று டிரம்பின் குடியரசு கட்சியினர் வழக்கு தொடுத்திருந்தனர். எனினும், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நவம்பர் 3 என்று தேதியிடப்பட்ட, ஆனால் தாமதமாக வந்து சேர்ந்த வாக்குகளைப் பிரித்து வைத்திருக்கும் நடைமுறை ஏற்கனேவே அங்கு உள்ளது.

அந்த நடைமுறையை பின்பற்றுமாறு மட்டுமே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இங்கு சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

இங்கு 20 தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளதால், இந்த மாநிலத்தைக் கைப்பற்றினால் பைடன் 270 எனும் வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கையைக் கடக்க முடியும்.

அமெரிக்க தேர்தல் முடிவும், இந்திய அமெரிக்க உறவும்

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான இணக்கமான உறவைப் பார்க்கும்போது, பைடன் அமெரிக்காவின் அதிபரானால், உறவுகள் அப்படியே இருக்குமா என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களுக்கும், அமெரிக்காவின் அடுத்த அதிபரைப் பற்றி அதிக உற்சாகமோ கவலையோ இல்லை.

வாக்குகள் எண்ணப்படும் மாகாணங்களில் இப்போதைய நிலவரம் என்ன?

நெவாடா - இதுவரை 91% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நெவாடாவில், அதிபர் டிரம்பை விட பைடன் 22,657 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். இந்த மாகாணம் ஆறுதேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

பென்சில்வேனியா - 20 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்றுள்ள பென்சில்வேனியாவின் டிரம்பை விட பைடன் சுமார் 20,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இன்னும் இங்கு சுமார் ஒரு லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. அதிகாரிகளால் சரிபார்க்கப்படாத கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளும் இங்கு இன்னும் எண்ணப்படவில்லை.

ஜோர்ஜா - இங்கு 16 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இங்கும் டிரம்பை விட பைடன் 4,200 வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறார். வெள்ளிக்கிழமைக்குள் தேர்தல் அதிகாரிகள் கைகளுக்கு வந்தால், பல்லாயிரம் ராணுவத்தினரின் தபால் வாக்குகளும் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். எனினும், போட்டி நெருக்கமாக உள்ளதால் மறு எண்ணிக்கை நடக்கும் என்று இந்த மாகாண அரசு கூறியுள்ளது.

அரிசோனா - 11 தேர்தல் சபை வாக்குகள் உள்ள இந்த மாகாணத்தில் பைடன் சுமார் 39,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். எனினும், டிரம்ப் பெற்றுள்ள வாக்குகள் இந்த இடைவெளியைக் குறைத்து வருகின்றன.

வட கரோலினா - 15 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த மாகாணத்தில் டிரம்ப் சுமார் 8,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இங்கு பதிவான வாக்குகளில் சுமார் 98% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

அலாஸ்கா - 3 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த மாகாணம், தேர்தல் முடிவுகள் மீது பெரும் தாக்கம் செலுத்தாது. இங்கு இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் 62.9% வாக்குகளைப் பெற்று டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

'நாட்டு மக்களுக்கு பைடன் உரையாற்றுவார்'

தனது சொந்த மாகாணமான டெலவேரில் இருந்து, அமெரிக்க மக்களுக்கு உரையாற்ற ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு 270 தேர்தல் சபை வாக்குகளுக்கும் அதிகமாகக் கிடைத்துள்ளதாக ஊடங்கங்கள் உறுதிப்படுத்தினால், அவர் தாம் வெற்றி பெற்றதாக அறிவிப்பார் என்றும் பைடனின் குழுவில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்பார்த்த வேகத்தைவிட வாக்கு எண்ணிக்கை மெதுவாகவே நடந்து வருவதால், அவர் 270 எனும் எண்ணிக்கையைக் கடந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அவரது குழுவில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக சிபிஎஸ் நியூஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

தாம் வெற்றிபெற்றதாக, தவறான வகையில் பைடன் அறிவித்துக்கொள்ளக் கூடாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். என்னாலும், அவ்வாறு அறிவித்துக்கொள்ள முடியும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், சட்ட நடவடிக்கைகள் வெறும் தொடக்கம் மட்டுமே என்று கூறியுள்ளார்.

இன்னும், முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும், தாம் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் ஏற்கனேவே இரண்டு முறை கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, டொனால்ட் டிரம்ப் அல்லது ஜோ பைடன் ஆகிய இருவரும் அதிபராகத் தேவைப்படும் 270 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெறவில்லை.

ஆனாலும், ஒப்பீட்டு அளவில் வாக்குகள் அடிப்படையில் பைடன் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 44 மாகாணங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இப்போதைக்கு போர்க்கள மாகாணங்களான ஜோர்ஜா, நெவாடா, பென்சில்வேனியா, அரிசோனா ஆகியவற்றில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. ஜோர்ஜாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அந்த மாகாண அரசு தெரிதவித்துள்ளது.

இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாத பென்சில்வேனியா, நெவாடா, அரிசோனா உள்ளிட்ட மாநிலங்களின் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். வட கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களிலும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை.

பல இடங்களில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை ஏற்க அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், தொடர்ச்சியாக பதிவிட்ட ட்விட்டுகளில், "பல மாகாணங்களில் சட்ட நடவடிக்கை மூலம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் தடுத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சி அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பைடனின் பாதுகாப்பை அதிகரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் ஆயத்தமாகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.

டிரம்புக்கு ஆதரவாக அவரது சொந்த கட்சிக்காரர்கள் கூட வாய் திறக்க மறுத்து வருவதாக அவரது மகன் எரிக் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறும் டிரம்ப்பை பொருத்தவரை, நியாயமாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டால், தான்தான் உத்தேச வெற்றியாளர் என்று கருதுகிறார். ஆனால், தேர்தல் நடைமுறை மோசடி தொடர்பாக அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்கவில்லை.

காரணம், தனது தேர்தல் பரப்புரையில் ஆதரவாளர்களிடமும் பொதுமக்களிடமும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அஞ்சல் வழியில் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி