ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (Oxford English Dictionary - OED), இந்த ஆண்டு ஜூன் மாதப் புதுப்பிப்பில் சில இலங்கை வார்த்தைகளைச்
சேர்த்துள்ளது. தொடர்புடைய சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் அகராதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
'கொத்து ரொட்டி' (Koththu Rotti) என்பது இலங்கையில் மிகப் பிரபலமான தெருவோர உணவாகும். இது, காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களை, சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ரொட்டியில் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது, இது தாள ரீதியாக தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்களைக் கலந்து, மிக மிகத் மெல்லிசாக நறுக்கப்பட்ட கீரை வகையை இலேசாக வதக்கித் தயாரிக்கப்படும் உணவுதான் 'மெல்லுங்' (Mellung) என்றும் சிங்களத்தில் குறிப்பிடப்படுவதாக அகரைாதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அகராதியில், 'கிரிபாத்' (பால்சோறு) (Kiribath) என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது. இது, தேங்காய்ப்பால் மற்றும் அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு என்றும் அதில் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், 'அவுறுது' (Awurudu) என்ற வார்த்தையும் அகராதியில் இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய உணவுகள், சடங்குகள் மற்றும் விளையாட்டுகளுடன் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என்று இது விவரிக்கப்படுகிறது.
முஸ்லிம் பண்டிகைகளில் தேங்காய்ப்பால், வெல்லம் மற்றும் வாசனைப் பொருட்களால் செய்யப்படும் 'வட்டளப்பம்' (Wattalappan) என்ற இனிப்புப் பதார்த்தத்தின் பெயரும் அகராதியில் இடம்பிடித்திருக்கிறது.
மேலும், கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கடி கேட்கப்படும் போர்த்துகீசிய மொழியால் ஈர்க்கப்பட்ட 'பைலா' (baila) மற்றும் 'பப்பரே' (papare) என்ற இசைப் பாணியும் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிராமங்களில் காணப்படும் பிரதான பெரிய வீட்டை அழைக்கும் “வளவ்வ” - Walawwa (பங்களா) என்ற பெயரும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் சிங்களப் பெண்கள் அணியும் 'ஒசரி' (Osari) என்றழைக்கப்படும் சேலை வகையின் பெயரையும் குறிப்பிட்டு, அது சிங்களப் பெண்கள் அணியும் பாரம்பரிய வகை புடவை என்று விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'asweddumize' (அஸ்வெசும) என்ற வார்த்தையும் அகராதியில் இடம் பெற்றுள்ளது. இது சிங்கள மொழியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை மற்றும் விவசாயம் மற்றும் நில சீர்திருத்தம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.