இஸ்ரேலில் பணிபுரியும் எந்த இலங்கையர்களும் நாட்டிற்குத் திரும்புவதற்கு கோரிக்கை விடுக்கவில்லை என்று, வெளியுறவு -
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக, அந்நாடுகளிலுள்ள இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் சுமார் 35 இலங்கையர்களும் இஸ்ரேலில் சுமார் இருபதாயிரம் இலங்கையர்களும் உள்ளனர்.
“இஸ்ரேலில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. சமீபத்திய நாட்களில் நடந்த போரில், நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலை மோசமாக இல்லை. அவர்களில் ஒருவரின் காலில் கண்ணாடி விழுந்ததால் அவர் சற்று ஆபத்தான நிலையில் உள்ளார்.
“அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையை வழங்க எங்கள் தூதரகம் 24 மணி நேரமும் தலையிட்டு வருகிறது. இந்த விடயத்தில் எங்கள் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
“இஸ்ரேலில் பணிபுரியும் ஒருவரின் மகன் இந்த நாட்டில் உயிரிழந்துவிட்டார். எங்கள் தூதரகம் தலையிட்டு, வேறு நாடு வழியாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளோம். அவர் ஜோர்தானுக்குச் சென்று அங்கிருந்து அம்மானுக்கு விமானத்தில் செல்லலாம். வணிக ரீதியாகச் சென்றிருந்தவர்களில் இருவர் திரும்பி வருவதற்காகக் கோரியிருந்தனர். அவர்கள் விரைவில் திரும்பி வருவதற்கு நாங்கள் வசதி செய்துள்ளோம்.
“இஸ்ரேலில் வசிக்கும் மற்ற இலங்கையர்கள் இலங்கைக்கு வர விரும்பவில்லை. அவர்கள் அங்கு கிடைக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வாழ்கின்றனர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. போர் மிகவும் தீவிரமாகிவிட்டால், அருகிலுள்ள நாடுகளின் எல்லைகளுக்கு விமானங்களை அனுப்பி இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவோம்.
“எந்த நேரத்திலும் இலங்கையர்களை மீண்டும் அழைத்துவர நாங்கள் தயாராக உள்ளோம். விடுமுறையில் இருப்பவர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல அவசரப்பட வேண்டாம். போர் முடிந்த பிறகு அவர்கள் செல்லலாம். அதற்காக, அவர்களின் விசாக்களை நீட்டிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இஸ்ரேலில் உள்ள எந்த அரசு நிறுவனமும் செயல்படவில்லை. இந்த விடயத்தில் தலையிடும் PIBA, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.