ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று
விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்றமையைக் குறிக்கும் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தார் என்று உபுல்தெனிய மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2024ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையின்போது 57 கைதிகளும், கடந்த பெப்ரவரி 4 சுதந்திர தினத்தன்று 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத போதிலும் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டனர். மேலும், கடந்த வெசாக் பண்டிகையின்போது 29 சிறைகளில் இருந்து 388 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் குறைந்தது இருவர் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலைகள், சட்ட அமுலாக்க அமைப்புகளின் பெரும் தோல்வியை இந்தக் கண்டுபிடிப்புகள் பிரதிபலிக்கினறன. சட்டவிரோத நடைமுறைகள், அதிகார துஷ்பிரயோகம் வேரூன்றத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான சட்டவிரோத வலையமைப்புகளை அகற்றுவதில் சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணை அதிகாரிகளை ஆதரிக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மூத்த சிறை அதிகாரிகள், நிர்வாகிகளின் சொத்துகள், நிதி அறிவிப்புகள் குறித்து தனித்தனியான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்." - என்றார்.
இதனையடுத்துப் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவை இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே உபுல்தெனிய கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு மாறாக நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத கைதி ஒருவர் கடந்த வெசாக் பண்டிகையின்போது விடுதலை செய்யப்பட்டார். இந்த விடயம் பேசுபொருளானதையடுத்து, கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் எழுத்துபூர்வமாக அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியது.
மறுநாள் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அத்துல திலகரட்ண என்ற கைதி சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இந்தச் சிறைச்சாலையிலேயே மற்றொரு கைதியும் இவ்வாறு முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.