மத்திய மலைநாட்டில் இந்நாட்களில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழை காரணமாக,
பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால், மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கங்க இஹலகோரல பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமலில் இருக்கும் என்று, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (27) காலை ஹட்டன் செனன் பகுதியின் பிரதான வீிதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிரதான வீதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளூர்வாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதனால், வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில், பல பெரிய மரங்கள் பிரதான வீதியில் விழுந்துள்ளன. இதனால் வீதியோரத்தில் அமைந்துள்ள பல மின்சார மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
ஹட்டன் வனராஜா தோட்டத்தில் உள்ள ஒரு மாமரம் வரிசையாக உள்ள எஸ்டேட் வீடுகளின் மீது விழுந்ததில், மூன்று எஸ்டேட் வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் சேதமடைந்துள்ளன.
தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளன. இதன் விளைவாக ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோர்ட்டன் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.