கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயற்சித்த 2 பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை வாகன உதிரி பாகங்களில் மறைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வணிகப் பாதை வழியாக வெளியேற முயற்சித்த 2 பயணிகள் நேற்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் எனவும் மற்றவர் கண்டி ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும், வணிகர்களின் தேவைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் நேற்று காலை 8.30 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் இருந்த 6 கிலோகிராம் 700 கிராம் எடையுள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாகன தாங்கி அமைப்புகளுக்குள் 21 தங்க பிஸ்கட்டுகளையும் வாகன குளிரூட்டும் அமைப்புடன் தொடர்புடைய நீர் பம்ப் பாகங்களுக்குள் உருக்கி அந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட பல தங்கக் கட்டிகளையும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு பயணிகளும் அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்த தங்கமும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.