பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாளைய தினம் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது,
தங்கள் பாரம்பரிய மரக் கோடரிகளைக் கொண்டு வரலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது, தமது பாரம்பரிய கோடரியை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வாக்களிக்கும் போது அதனை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
தங்கள் பாரம்பரிய கோடாரிகளை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்வதை தேர்தல் அதிகாரிகள் தடுக்க முயன்றால், வாக்களிப்பதைத் தவிர்க்குமாறு தனது சமூகத்தினரிடம் கேட்டுக் கொண்டதாக, பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோ அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விளக்கத்தை அளித்தது.
ஒரு கோடியே 72 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி
இலங்கையின் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் மூலம் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக்குழுக்களின் மூலம் 75 ஆயிரத்து 589 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இவர்களில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தேர்தல் பணிகளில் ஆயிரக்கணக்கான அரச பணியாளர்கள்!
நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான பல்வேறு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள் முதல் மேலதிக அமைச்சகச் செயலாளர்கள் வரை மொத்தம் 250,000 அரசு பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இலங்கை தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் தகவல்படி, 150,000 க்கும் மேற்பட்ட பெண் அரச அதிகாரிகளும், தேர்தல் கடமைகளில் பங்கேற்பார்கள்.
பொது சேவையின் பல்வேறு தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள 4,877 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதற்கிடையில், சுதந்திரமான மற்றும் நியாயமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கண்காணிப்பதில் ஆணையகத்திற்கு உதவ ஏழு உள்ளூராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் முன்வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதில், பழமையானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான இரண்டு கண்காணிப்பு அமைப்புகளான பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை மற்றும் தேர்தல் சி.எம்.இ.வி என்ற தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் ஆகியவை வாக்குச் சாவடிகளுக்குள் நுழையும் அதிகாரங்களை கொண்டுள்ளன.
மீதமுள்ளவை நடமாடும் பார்வையாளர் அமைப்புக்களாக செயல்படலாம் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவுக்குள் பெரும்பாலான முடிவுகளை அறிவித்து, புதன்கிழமைக்குள் முழு முடிவுகளை அறிவிக்க ஆணையகம் எதிர்பார்க்கிறது என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை (6) காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்று காலை எடுத்து செல்லப்பட்டுள்ன.
இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனால் குறித்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் , 517 வாக்களிப்பு நிலையங்களுக்கு 672 வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (05.05.2025) காலை 7.30 மணி முதல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான , அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின் ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
குறித்த தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேருந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.S.முரளிதரன் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வே. சிவராசா அவர்களும் இணைந்து அனுப்பிவைத்தனர். தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
திருகோணமலை
நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கான வேலைப்பாடுகள் இன்று (05) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று திங்கட்கிழமை (05) காலை 9.00 எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை; மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும் தெருவத்தாட்சியும் அரசாங்க அதிபர் முரளீதரன் தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.
மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவுக்காக தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலையடுத்து மாவட்டத்தில் நகர் மற்றும் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதுடன் இதுவரை 353 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 90 வீதமான முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார்.