பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதல்களுடன்
தொடர்புபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில சிறைக்கு சென்று சந்தித்து வந்திருந்தார்.
இந்தச் சந்திப்பு, நேற்றைய தினம், சுமார் 30 நிமிடங்கள் அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொண்டு, உதய கம்மன்பில தெரியப்படுத்தவுள்ளார்.
அது மாத்திரமன்றி பிள்ளையான், சிறையில் தனது நிலைமை குறித்து உதய கம்மன்பிலவிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இலங்கையின் ஆட்சியாளர்கள் தன்னை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசி விட்டதாகவும், முதுகு வலியுடன் நிலத்தில் நித்திரைகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையான் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், தனக்கு நித்திரை செய்வதற்குகூட முறையான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை என பிள்ளையான் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறிருக்க, இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையான தொடர்புபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இது, டிசம்பர் 15, 2006 அன்று நடந்த கடத்தல் சம்பவத்துக்காக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கைதாகும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், தற்போது 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சட்டத்தரணி உதய கம்மன்பில, காவலில் உள்ள பிள்ளையானை சந்தித்து நேற்று (15) அரை மணி நேரம் கலந்துரையாடினார்.