முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்
அழைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்னாள் ஜனாதிபதியின் கவனம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மீது ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை அழைப்பதற்கான திகதி, தமிழ் - சிங்கள புத்தாண்டுக் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் காலகட்டத்தில் அவரும் அவரது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால், வேறு திகதியைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்புடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தான் தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வெளியிட்ட கருத்தொன்று தொடர்பில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிவேகச் செயற்பாடுகள் அதிசயமளிக்கின்றன.
“மேற்படி கருத்து, நேற்று (10) மாலை ஆறு மணிக்கே ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்த நேரம் முதல் அடுத்த நாள் காலை ஆணைக்குழுவின் அலுவலகத் திறக்கப்படும் வரையில், எந்தவொரு அதிகாரியும் ஆணைக்குழுவில் பணியாற்றியிருக்கவில்லை.
“ஆணைக்குழுவின் அழைப்பாணை, இன்று (11) நண்பகல் 12.30 மணிக்கே, 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அலுவலகத்துக்குக் கிடைத்தது. ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கமைய, முன்னாள் ஜனாதிபதியை ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுத்திருப்பதாகவே தெரிகிறது.
“முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டு 18 மணித்தியாளங்களுக்குள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
“ஆணைக்குழு அதிகாரிகள் இரவில் சேவையாற்றாத நேரத்தைக் கழித்துப் பார்க்குமிடத்து, சுமார் மூன்று மணித்தியாலங்களுக்குள் மேற்படி கருத்து தொடர்புடைய ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை ஆணைக்குழுவின் தவிசாளர் நாயகத்துக்கு அனுப்பி, அவர் தலைமையில் ஆணைக்குழுவின் அனுமதிக்காகஆணைக்குழு உறுப்பினர்களைக் கூட்டி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது.
“ஆணைக்குழுவின் இந்தச் செயற்பாடு, உலக சாதனைக்கு ஒப்பானது. இவ்வாணைக்குழு, இதற்கு முன்னெப்பொழுதும், இவ்வாறாகச் செயற்பட்டதில்லை” என்று, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.