'ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர்

நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்' என்று, நேற்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.

இச்சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

'இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியப் பிரதமரிடம் நான்கு விடயங்களை முன்வைத்தது. ஷமுதலாவது - இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை - பங்களிப்பு - உரித்து - இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம் என்று குறிப்பிட்டோம்.

வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ, அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிடடோம்.

விசேடமாக வடக்கு, கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம். இரண்டாவது விடயம் – தமிழர்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஓரளவு நெருக்கமாக வந்த சர்வதேச ஆவணம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டோம்.

ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுத்த முயற்சியை ஒற்றையாட்சி என்ற நெருக்கடிக்குள் முடக்கியமையால் அது பலன் தரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

1987ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, இவ்வளவு காலத்தின் பின்னரும் இன்னமும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள், நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்தியா கோர வேண்டிய - வலியுறுத்த வேண்டிய - அவல நிலை நீடிப்பதற்கு இது ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட்டமையே காரணம் என்பதை விளக்கினோம்.

இந்த 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருப்பதால் மத்திய அரசே மேலானது, 13ஆம் திருத்தத்தினால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் வருவதற்கு இடமில்லை என்று அப்போதே அதை ஒட்டிய ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

ஒற்றையாட்சி முறைமைக்குள் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்குத்தான் இருப்பதை அது உறுதிப்படுத்தியதை நாங்கள் தெளிவுபடுத்திச் சுட்டிக்காட்டினோம். ஆக, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் இருப்பதால், அந்த ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிரவே இடமில்லை என்பதை இந்தியப் பிரதமருக்குச் சொன்னோம்.

இதுவே 38 வருடங்களாக நாங்கள் கண்ட அனுபவம் என்பதையும் தெரிவித்தோம். 13ஆம் திருத்தத்தை ஒற்றை ஆட்சிக்குள் முடக்கியமையால்தான் இன்றும்கூட தமிழர்களுடைய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை நாங்கள் விளங்கப்படுத்தினோம்.

இதனையே, இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு முதல் தடவையாக வந்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, கூட்டுறவு சமஷ்டியே தீர்வுக்கு வழி என்று குறிப்பிட்டமையை நாங்கள் நினைவுபடுத்தினோம். ஒற்றையாட்சிக்கு வெளியே வந்து, சமஷ்டி முறைமைக்குக் கீழ் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி, ஒரு தீர்வைக் காண எத்தனித்தால் வழி பிறக்கும் என்பதை நாம் விளக்கினோம்.

இந்த விடயங்களை அடைவதற்காகத் தமிழ்க் கட்சிகளை டில்லிக்கு வரவழைத்துப் பேசுங்கள் என்று நாங்கள் இந்தியப் பிரதமரைக் கோரினோம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறாமல், ஆனால் அதே நேரம் ஒற்றையாட்சி முறைமையைத் தாண்டி, ஒரு சமஷ்டி ஏற்பாட்டை முழுமையாக அடையக்கூடிய - இந்தியாவும் ஏற்றுக்கொள்ளத்தக்க - பொது நிலைப்பாடு ஒன்றை எட்டுவதற்கு உதவுமாறு நாங்கள் இந்தியப் பிரதமரை வேண்டினோம்.

மூன்றாவதாக - இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்தியா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம் என்பதைத் தெரிவித்தோம்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் வெளித் தரப்புகளுக்கு இப்பிராந்தியத்தில் காலூன்ற இடம் அளிக்கக்கூடாது என்ற எங்களது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினோம்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் இந்தியாவின் பாதுகாப்பு நோக்கோடு நோக்கப்படுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளையில் இந்தப் பிராந்தியத்தின் குடிசனப் பரம்பல் விகிதாசாரத்தை மாற்றி அமைக்காத விதத்தில் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா முழு அளவில் ஈடுபட்டுப் பங்களிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டோம்.

மீனவர் பிரச்சினை பற்றி நான்காவதாகப் பேசினோம். இலங்கையின் வடக்கு - கிழக்கு மீனவர்கள் இன்று வாழ்வா, சாவா நிலைமையில் அவலப்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.

இந்தப் பிரச்சினை எந்த வழியிலாவது தீர்க்கப்பட்ட வேண்டும். அது தொடர இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் வடக்கு - கிழக்கு மீனவ பிரதிநிதிகளும், அரசியல் பிரதிநிதிகளும், இந்தியாவுக்குச் சென்று, எங்கள் உறவுகளோடும் மீனவப் பிரதிநிதிகளோடும் பேசித் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம்.

எங்கள் மீனவர்களின் இழப்புக்கு உரிய நட்டஈடுகள் கூட இன்னும் வழங்கப்படவில்லை. அவை பற்றியும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்” என்றார் அவர்.

-முரசு

இந்தச் சந்திப்பு தொடர்பில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.  பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web