விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள் பற்றிய சமீபத்திய கணக்கெடுப்பில்
கொழும்பு மாவட்டத்தில் 44,000க்கும் மேற்பட்ட குரங்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவில்தான் அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டச் செயலக வட்டாரங்கள் இந்த எண்ணிக்கை சுமார் 33,000 என்று கூறுகின்றன. மொரட்டுவ பகுதியில் 115 குரங்குகளும், தெஹிவளை பகுதியில் 7 குரங்குகளும் பதிவாகியுள்ளன.
நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிச் செல்லும் லொறிகளின் ஊடாகவே, மொரட்டுவ பகுதிக்கு குரங்குகள் வந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் ஒரு தொகுதிதான், தெஹிவளை வரை நீண்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான குரங்குகள் வாழ்கின்றன. தொம்பே, அத்தனகல்ல, திவுலபிட்டிய மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா மாவட்டத்தில் 69,000 குரங்குகள், 27,000 மயில்கள் மற்றும் 48,000 மரஅணில்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது.
நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குரங்குகள், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே பதிவாகியுள்ளன என்பது தெரியவந்துள்ளது. அந்த மாவட்டத்தில் இருந்து சுமார் 1,350 குரங்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 1,200 சாவகச்சேரி பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன.
அந்தப் பகுதிகளில் சிறிது காலமாக நடந்து வரும் போர் காரணமாக, குரங்குகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. மாவட்ட செயலகத் தகவல்களின்படி, கேகாலை மாவட்டத்தில் சுமார் 1.1 மில்லியன் குரங்குகள் வசிக்கின்றன. புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே அதிக குரங்குகள் வசிக்கின்றன என்று கூறப்படுகிறது.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மிஹிந்தலை மற்றும் கெக்கிராவ போன்ற பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் பதிவாகியுள்ளதால், விவசாய அமைச்சின் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை (03ஆம்) மிஹிந்தலை பகுதிக்குச் சென்று மறு கணக்கெடுப்பை நடத்தினர். இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை (04) கெக்கிராவ பகுதியில் மறு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மிஹிந்தலைப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஒரே குரங்குகள் கூட்டத்தை பல சந்தர்ப்பங்களில் கணக்கெடுத்திருப்பது தெரியவந்தது.
கடந்த மார்ச் மாதம் மிஹிந்தலைப் பகுதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 41,586 குரங்குகள், 19,159 மந்திகள், 11,531 மரஅணில்கள் மற்றும் 24,522 மயில்கள் இருப்பது தெரியவந்தது.
குரங்குகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு காரணமாக, குரங்குகளைப் பெரிய கூண்டுகளில் வைத்திருப்பது தொடர்பில் வனவிலங்குகள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.