அநுரகுமார திஸநாயக்காவின் ஆளுமை மிக்க உரைகளே தேசிய மக்கள் சக்தியை ஆட்சி பீடத்திற்கு ஏற்றியது என்பது எல்லோரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
முன்னைய அரசுகளின் ஊழல், மோசடிகள் குறித்து விலாவாரியாகப் பேசிப் பேசியே தமது அரசியல் அணியை ஆட்சிபீடம் ஏற்றினார் அநுரகுமார திஸநாயக்க.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல், மோசடிகளை அடியோடு இல்லாது ஒழிப்பது மட்டுமின்றி, முன்னைய காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் கைது செய்து, இழுத்து வந்து, சட்டத்தின் முன்னால் நிறுத்தி, பொறுப்புக் கூற வைத்து, அவர்கள் சூறையாடிய அரச சொத்துக்கள், நிதிகளை மீளக் கொண்டு வந்து சேர்ப்போம் எனத் திரும்பத் திரும்ப உறுதிப்படக் கூறினார் அநுரகுமார திஸாநாயக்க.
அவரது அந்த வாயச் சவடால் பேச்சை நம்பித்தான் மக்கள் அவருக்கும், பின்னர் பொதுத் தேர்தலில் அவரது தரப்புக்கும் பெருவாரியாக வாக்களித்து அதிகாரத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க நாட்டின் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு பெரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இல்லை என்று வைதார்.
'இலஞ்ச, ஊழல் ஆனைக்குழு 2021ஆம் ஆண்டில் ஆக 36 பேரையே கைது செய்தது. அதிபர்கள், ஒரு சப் இன்ஸ்பெக்டர், மூன்று சார்ஜண்ட்கள், 5 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தர், நான்கு கிராம சேவையாளர்கள், ஒரு சாதாரண பொதுமகன், பிரதேச சபை ஒன்றின் பிரதம எழுதுவினைஞர், ஒரு தொழில்நுட்ப அதிகாரி, ஒரு கால்நடை அலுவலர், ஒரு காணி அலுவலர், பஸ் டிப்போவின் ஒரு முகாமையாளர் போன்றோரே கைது செய்யப்பட்டார்கள். பெரும் அளவில் ஊழல், மோசடிகள், குளறுபடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளும் அவர்களின் முகவர்களும் தீண்டப்படவே இல்லை” என்று அப்போது குறை கூறியிருந்தார் அநுர குமார திஸாநாயக்க.
மிக் ரகக் குண்டு வீச்சு விமானக் கொள்வனவில் பெரும் ஊழல் இடம்பெற்றது என்பதிலிருந்து பல ஊழல் விடயங்கள் குறித்து அவர் விவரிக்கத் தவறவில்லை.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கழிந்தும், இத்தகைய ஊழல், மோசடி, குளறுபடிகள் தொடர்பாக புதிய நடவடிக்கை எதையும் அவரது அரசு எடுக்கவே இல்லை. இந்த காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டு பிள்ளைகளான நாமல் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ ஆகியோர் மீது மட்டும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவை கூட ஏற்கனவே இருந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான்.
எதிரணியில் இருந்த போது வாய் முழக்கம் செய்து, காரியங்களை வெட்டிப் பிடுங்க போகிறார் எனப் பிரகடனப்படுத்திய அநுரகுமார திஸாநாயக்கவினால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அந்த வாய்ச் சவடால் விடயங்களை செயலில் செய்து காட்ட முடியவில்லை என்பதுதான் கள யதார்த்தமாகும்.
இதே போலத்தான் ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் விரைந்து நிறுத்துவோம் என்ற அநுரகுமார திஸாநாயக்கன் வாக்குறுதியும் கூடச் செயல்படுத்த முடியாத வக்கற்ற நிலைமையே நீடிக்கின்றது.
அடுத்த ஏப்ரல் 21ஆம் திகதி இந்தத் தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவு நாள். அதற்கிடையில் காத்திரமான திசையில் விசாரணை முன்நகரவில்லையானால் கட்டுநாயக்கா அதிவேகப்பாதையை ஒட்டி சுமார் 38 கிலோமீட்டர் ஆட்சேபனை நடைபவனியை முன்னெடுக்க கிறிஸ்தவ திருச்சபை தீர்மானித்திருக்கிறது.
செயலில் செய்து காட்ட முடியாத வெறும் வாய்ச் சவடால் பேச்சுக்கள் அரசியலில் எப்போதுமே நெருக்கடியையே தேடித் தரும் என்பது உண்மைதான்.
-முரசு ஆசிரியர் தலையங்கம்