கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல்

ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்துநிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணியில், கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான கனவான் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த பிள்ளையான், இற்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னிக் காடுகள் அதிர்கின்ற அளவிலே எங்கள் தளபதி ஒரு அறிவிப்பைச் செய்தார்.

அனைவருக்கும் தெரியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே வடக்குத் தலைமைகளால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வருவதை எதிர்த்துக் குரல் எழுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று நான் உட்பட சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் போர்க்கொடி தூக்கினோம்.

ஆனாலும் சிறிலங்கா அரசுடன் கூட பேச்சுவார்த்தை நடத்திய விடுதலைப் புலிகளின் வடக்குத் தலைமை ஆயிரம் ஆயிரம் மாவீரர்களைக் கொடுத்த எம்முடன் பேசமறுத்தமை கசப்பான விடயங்கள்.

இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து வெளியேறி, ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதை உணர்ந்து ஒரு ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முனைந்தோம்.

நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினாலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத சில துரதிஸ்டவச நிகழ்வுகள் நடந்தன. இருப்பினும் அரசியல் ரீதியில் அவர் அவரால் இயன்ற மக்கள் சேவையை ஆற்றியிருக்கின்றார். மறுபுறத்தி நாங்களும் ஆற்றியிருக்கின்றோம்.

தற்போது பல்லின மக்கள் வாழும் இந்த மாகாணத்திலே தமிழ் மக்களினுடைய எதிர்காலம் அவர்களின் அரசியல் அதிகாரத்தினைத் தக்க வைப்பது, கல்வி பொருளாதார சுகாதார உட்கட்டுமான மேம்பாடு, மாகாணசபையின் அதிகாரம் என்பவற்றைப் பார்க்கும் போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த மக்களுக்கும் இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் எமது சமூகம் தொடர்ந்து பின்தள்ளப்படுகின்ற அபாயம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.

கடந்த கால கசப்புகளை மறந்த எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியற் தளத்தை நிறுவ வேண்டும் என்ற பகிரங்க பிரயத்தனத்தின் காரணமாகவும் எமது கட்சியின் சிரேஸ்ட தலைவரின் முயற்சியின் காரணமாகவும் நாங்கள் கருணா அம்மானுடன் ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம்.

இதனூடாக நாங்கள் எமது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும், சிறந்த ஒரு அரசியற் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் அண்மையில் உருவாக்கியுள்ள கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்துநிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது.

எனவே எமது கிழக்கு மாகாண மக்களே, நாங்கள் முன்னமே கூறிய 21 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற வஞ்சிப்பு போலவே 70, 80 ஆண்டு காலமாக  நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம், வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம், பல கஸ்டமான சம்பவங்களைக் கடந்து வந்திருக்கின்றோம்.

2008ம் ஆண்டின் பின் ஓரளவு எமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய சமூகமாக நாம் நின்றிருக்கின்றோம். இப்போது அந்த நிலைமை சற்று மாறுபட்டிருக்கின்றது.

அதேபோன்று ஏனைய தேசிய மட்ட அரசியல் சக்திகளுக்குச் சமமாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் கருதியும், எங்களது போராட்டத்திற்கு நாங்கள் கொடுத்த விலைகளை நாங்கள் உயிர்வாழுகின்ற போதே எமது மக்களைத் தூக்கி நிறுத்தி அவர்களை முடியுமானவரை அபிவிருத்தி செய்துவிட வேண்டும் என உறுதியான எண்ணப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

இந்த கட்டமைப்பு இனி ஒருபோதும் சிதைவடையாமல் கருத்து பேதங்கள் இல்லாமல் உறுதியாக இருப்பதற்கான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த இணைவை இயற்கையும் ஏற்றுக் கொள்ளும் அதேபோன்று எமது மாகாணத் தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டு எம்முடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

WhatsApp_Image_2025-03-22_at_11.23.51.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி