ஒன்பது மாத விண்வெளி பயணத்திற்குப் பிறகு இன்று (மார்ச் 19) பூமிக்கு திரும்பியுள்ள
சுனிதா மற்றும் வில்மோர் இருவரின் உடல்நிலை குறித்து நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இன்று அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்பினர்.
286 நாட்களுக்கு பிறகு பூமியின் ஈர்ப்பு விசைக்குள் மீண்டும் நுழைந்த பிறகு சுனிதா மற்றும் வில்மோர் இருவரின் உடல்நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியேறிய வீரர்கள், நிற்க முடியாத நிலையில் ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நாசாவின் வணிகக் குழு திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ”தரையிறங்கிய பிறகு விண்வெளி வீரர்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவர்களின் உடல்கள் மீண்டும் மாறத் தொடங்குவதால், நாசாவின் 45 நாட்கள் மீட்புத் திட்டத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் தங்களை சாதாரணமாக உணர்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்ததால் சுனிதா மற்றும் வில்மோர் இருவருக்கும் தசைச் சிதைவு முதல் இருதயக் கோளாறு வரை என குறிப்பிடத்தக்க உடலியல் சவால்கள் ஏற்பட்டிருக்கும். அவர்களின் உடல்நிலையானது அடுத்த சில வாரங்களுக்கு நாசா விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும்.