2024ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், விரைவில் திருத்தப்படும்
என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை ஆராய்வதற்காக பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய அமைச்சின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்காக மூன்று அமைச்சகங்களும் இணைந்து ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதுவரை, இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தண்டிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
இலங்கையில் கொண்டுவரப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பாக திருத்தத்தை இந்த அரசாங்கம் எப்போது மேற்கொள்ளும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறித்த சட்டம் திருத்தப்படும் வரை அந்த சட்டம் ரத்து செய்யப்படுமா இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு அல்லது முழுமையாக அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
“இந்த சட்டத்தின் கீழ் இன்றளவில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதனையும் அவர்களில் சிறையில் வைக்கப்பட்டு இருப்பவர்கள் எண்ணிக்கை எத்தனை என்பதனையும் கைது செய்யப்பட்ட நபர்களில் தண்டனை அளிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்பதனையும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
“இந்த சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் இன்று மட்டுமல்ல அன்றும் இடம் பெற்றது.
“முன்மொழியப்பட்டுள்ள வருமான வரி திருத்தச்சட்ட மூலத்தின் 15 சதவீத வரி அறவீடு ஏப்ரல் மாதம் முதல்அறவீடு செய்யப்படுவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
“ஏற்றுமதி துறையில் ஈடுபட்டிருக்கின்ற எத்தனை ஏற்றுமதியர்களுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது? என்பதை அரசு அறியுமா? இதன் மூலம் ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள வரிப்பணம் எவ்வளவு? கைத்தொழில் அமைச்சர் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். இந்த வரிக்கு அவர் எதிரானவர் என்று. ஆகவே நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.
“இந்த வரி விதிப்பின் ஊடாக ஹவாலா உண்டியல் போன்ற பல தொழில்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் பிரபலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம். ஆகவே விரும்புகிறேன் 15 வீத வரி என்பதனை அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? அதேபோல நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், “கடந்த அரசின் திட்டத்தில் நூற்றுக்கு 30 வீத வரி விதிப்பு முன்மொழியப்பட்டு இருந்தது. அதனை மீள் ஆய்வுக்கு உட்படுத்தி 15 வீதம் ஆக்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்“ என்றார்.
“இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 வீதம் என்ற அடிப்படையில் மதிப்பீடுகளை செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.