ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்

முன்னாள் இராணுவ புலனாய்வுப்  பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு  மே மாதம் 22ஆம் திகதி  தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயார் வேனில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை (01) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய நவகத்தேகம மற்றும் உலுக்குளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2018ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். 

தி நேசன் பத்திரிகையின் பிரதி ஆசிரியராக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயர், கடந்த 2008 மே மாதம் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு, தாக்குதலுக்கு இலக்கான பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் விசாரணைகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், 2017ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் லலித் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூன்று இராணுவத்தினர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபயவின் ஆட்சியில் அனைத்து விசாரணைகளும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதன் காரணமாக இந்தச் சம்பவமும் அப்படியே மறக்கடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கீத் நொயர் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு தற்போதைக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி