சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித
ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணையின்படி, யோஷிதவினால் பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து நியாயமான விளக்கத்தை வழங்க முடியாத காரணத்தினால், பொலிஸாரால் பணமோசடி சட்டத்தின் கீழ் குறித்த இருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய விசாரணையின்படி, டெய்சி ஃபோரஸ்ட்டுடன் கூட்டுக் கணக்காக நிலையான வைப்புத்தொகை மற்றும் வங்கி வைப்புத்தொகைகளில் பணம் பராமரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, டெய்சி ஃபோரஸ்ட்டை இதற்காக சந்தேகநபராக பெயரிடுமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இன்று (11) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபோரஸ்ட்டை சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணமோசடி சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க கூறுகையில், “அந்தப் டெய்சி ஃபோரஸ்ட்டுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரப்படும்” என தெரிவித்துள்ளார்.