கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு எத்தனிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் அனைத்து உறுப்பினர்களும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 "சமூகக் குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணை" செயலணிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களானது கருத்து சுதந்திரத்தை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையே எனவும்,  சிரேஷ்ட சட்டத்தரணியான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், சமூக விரோத குழுக்கள் என எதனை ஜனாதிபதி வரையறைபடுத்துகின்றார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இந்த விடயமானது ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மதத் தலைவர்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இது மிகவும் ஆபத்தான நிலைமை என்று எச்சரித்துள்ளார்.

 "இது எங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது, ஏனென்றால் பொது சேவை ஒரு சுயாதீனமான அமைப்பாகுத். நம் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவால் அது நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அரச பணியாளர்களும் குறித்த செலணியின் அறிவித்தல்களை செயற்படுத்த வேண்டுமெனக் குறிப்பிடுவது அரசியல் அமைப்பிற்கு முரணான விடயம்.  எமது நாட்டின் அரச சேவையின் சிரேஷ்டத்துவத்தைப் பொறுத்தவரை, அமைச்சின் செயலாளர்கள் ஆயுதப்படைகளின் தளபதிக்கு மேலாகவே உள்ளார்கள்” எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி ஸ்ரீலங்கா அரசின் வர்த்தமாணி அறிவித்தலில் வெளியானது.

பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டீ.எம்.எஸ். திஸாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வு பிரதாணி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வு தகவல் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, இராணுவ புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். ஹேவாவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கெப்டன் எஸ்.ஜே.குமார, விமானப்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் எயார் கொமாண்டர் எம்.டி.ஜே. வாசகே, பொலிஸ் விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.சீ.ஏ. தனபால மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி