நாட்டின் உண்மையான பிரச்சினைகள்,
பொருளாதார நெருக்கடி பற்றிப் பேசாமல், அற்ப அரசியல் செய்தால் நாடு மேலும் ஆபத்தில் வீழ்ந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு குழுவினருக்கு நாடாளுமன்ற அதிகாரம் வழங்கப்படுமானால் நாடு எங்கு கொண்டு போகும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு டொரிங்டன் ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
“இலங்கையைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு இலங்கையில் கல்வி கற்கக்கூடிய வலுவான பல்கலைக்கழக அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். முதல் இலங்கைப் பல்கலைக்கழகம் இலங்கையில் இருந்தது. அதன் பிறகு வித்யோதயா, வித்யாலங்காரா பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் அந்தப் பல்கலைக்கழகங்கள் களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களாக மாறியது.
பேராதனைக்குப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மொரட்டுவை, ருகுணு, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. வடமேற்கு, சப்ரகமுவ, ஊவா வெல்லஸ்ஸ, அக்னிதிக, வன்னி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் அதன் பின்னரே நிறுவப்பட்டன.
அதன் பிறகு, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது. கூடுதலாக, பட்டங்களை வழங்கும் தேசிய கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது.
கடந்த அரசாங்கங்கள் என்ன செய்தன என்ற கேள்விக்கு இதுவே நல்ல பதில். இவ்வாறான பல்கலைக்கழகங்கள் இலங்கையில் தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.