பாறுக் ஷிஹான்

அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர்

ஒருவரிடம் இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் பொறியியலாளர்  தன்னிடம் 4 இலட்சம் ரூபா இலஞ்சம் கோருவதாக – ஆக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவர்  கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய  புதன்கிழமை (12), அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன திணைக்களக் காரியாலயத்தில் வைத்து, நீர்ப்பாசன பொறியியலாளர் கூறியமைக்கு அமைவாக அவரின் வாகன சாரதியிடம் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதியாக 2 இலட்சம் ரூபாவை கனரக வாகனங்களின் உரிமையாளர் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பொறியியலாளரையும் அவரின் சாரதியையும் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (13) முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, அவர்களை விளக்கமறியவில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வயல் வெளிகளிலிருந்து மண்ணை ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கும் பொருட்டு, குறித்த கனரக வாகனங்களின் உரிமையாளரிடம் மேற்படி பொறியியலாளர் லஞ்சம் கோரியதாக  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி