இந்தியாவில் பாதிப்பு 6000-ஐ கடந்தது:இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 6,412 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து 199 ஆகியுள்ளது. நேற்றைவிட இது 30 அதிகம். இப்போது 5,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டதால் 330 கோடி மக்கள், வேலையிழந்துள்ளார்கள் என ஐ.நாவின் ஆய்வு தெரிவிக்கிறது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடா?

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படலாம் என்று கருதப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ள நிலையில், அதற்கான தட்டுப்பாடு உள்நாட்டில் உண்டாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மருந்துக் கடைகளில் இந்த மருந்து கிடைப்பது அரிதாகி வருகிறது.

தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்று சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி.

போரிஸ் ஜான்சன் உடல்நிலை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஞாயிறன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள் முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.

உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான முதல் நபர் போரிஸ் ஆவார்.

மீண்டு வரும் தொடக்க நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன் மீண்டும் முழு நேரப் பணிக்கு எப்போது திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் சிகிச்சை

கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி வெள்ளி காலை 7.02 மணி நிலவரப்படி 16,00,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவர்களில் கால் பங்கிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 4,65,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 50 லட்சம் கோடி நிவாரணத் தொகை அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு 500 பில்லியன் யூரோ (சுமார் 41 லட்சம் கோடி இந்திய ரூபாய்) நிவாரணத் தொகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.

ப்ரசெல்ஸில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்தைகளின் முடிவில், யூரோ க்ரூப்பின் தலைவர் மரியோ சென்டனொ இதனை அறிவித்தார்.

எனினும் இத்தொகை ஐரோப்பிய மத்திய வங்கி கேட்டதைவிட குறைந்த தொகையே ஆகும்.

ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார திட்டம் இது என பிரான்ஸ் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?

தமிழ்நாட்டில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 96 பேரில் 84 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.

மீதமுள்ள 12 பேரில் மூன்று பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள். 8 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மீதமுள்ள ஒருவர் மருத்துவர்.

தனியார் மருத்துமனையில் பணியாற்றிவந்த இவருக்கு நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

நேற்றைய நிலவரம் - சில முக்கிய செய்தித் துளிகள்

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டில், வியாழன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு வியாழன் மாலை தெரிவித்துள்ளது.

வியாழன் மாலை வரை அவர்களில் 477 பேர் குணமடைந்துள்ளனர், 169 பேர் இறந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவுக்கு பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி