இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின்

முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி மற்றும் அவரது பாரியார் ஜெமீலே சதாத் அலமோல்ஹுதா உள்ளிட்ட குழுவினர் இன்று (24) காலை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இதன்போது ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததோடு , 2008 ஏப்ரல் மாதத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதி நெஜாட்டின் இலங்கை விஜயத்திற்கு பின்னர், ஈரான் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

தனது வருகையை குறிக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி மத்தளை விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் குறிப்பேட்டிலும் பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை, இலங்கை - ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே, ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்வில் பங்கேற்பதை பெருமையாகவும் கருதுகிறேன்.

இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் என்றே கூற வேண்டும். இந்த அற்புதமான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கிறோம். ஆனால், நமது இரு நாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதி செய்வதே இங்கு மிக முக்கியமான விடயம் என்று நான் நம்புகிறேன்.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை விட நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களின் விருப்பமும் உறுதியும் முக்கியமானது என்று கூற வேண்டும்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே, ஈரான் இஸ்லாமிய குடியரசிடம் உள்ள நவீன தொழில்நுட்ப அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக கடந்த 45 வருடங்களில் ஈரான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இலங்கையுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்”  என்றார்.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி