ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாகவுள்ள முக்கிய வேட்பாளர்கள் பலரதும் அவதானம், தற்போது வடக்கை நோக்கியே

அமைந்துள்ளது. காரணம், வடக்கின் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஜனாதிபதி விக்ரமசிங்க, கடந்த சில மாதங்களாக, பலமுறை வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அபிவிருத்திப் பணிகள் பலவற்றிற்கும் முன்னிலையானார். அதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கில் உள்ள பாடசாலைகள் பலவற்றுக்கும் சென்று, தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதற்கிடையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர், திசைக்காட்டியினரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.  வெளிநாட்டு விஜயங்களில் பிஸியாக இருந்த அனுரகுமார திசாநாயக்க, தற்போது வடக்குக்கான விஜயத்தில் ஈடுபட்டு இருக்கிறார். வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என்று, வடக்கு மக்கள் மத்தியில் இவர் யோசனை முன்வைத்திருக்கிறார்.

அனுரகுமார தலைமையில் யாழ்ப்பாணம் வலம்புரி சங்கிலியன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமகாண கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கலந்துகொண்டிருந்தது, விஷேட அம்சமாகும்.

“நாங்கள் உங்களை சந்திக்கத்தான் வந்தோம். உங்களுக்கு 13 பிளஸ் தருகிறோம், ஃபெடரல் தருகிறோம், அதனால் நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்வதற்காக வரவில்லை. இந்த நாடு விழுந்திருக்கும் அதள பாதாளத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான யோசனைகளைப் பெற்றுக்கொள்ளவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். நீண்ட காலங்களாக எமது தலைவர்கள் பின்பற்றிய கொள்கைகளின் அடிப்படையில், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமா என்று பேசத்தான் வந்திருக்கிறோம். எமது நாட்டுக்கு புதிய பாதை ஒன்று தேவை என்றே நாம் அனைவரும் நினைக்கிறோம். எமது நாட்டை மாற்றியமைக்க வேண்டுமாயின், இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும், மாற்ற வேண்டும்” என்று, சங்கிலியன் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், அனுரகுமார குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முதன்மைப்படுத்தி, தமிழ் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது அதன் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் அனுமதி கிடைத்திருக்கவில்லை. இந்த யோசனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் அவர்களால்தான் முதன் முதலாக முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் அவர், அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார்.

அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றும் கட்சிகள் மற்றும் அதற்கு வெளியே உள்ள தமிழ் கட்சிகள் பலவற்றுடனும், இது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் முன்னிலையானால், தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிச் செல்லும் என்ற காரணத்தை முன்வைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அது, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு இடையூறாக அமையும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் வேட்பாளர் ஒருவர் ஒருவரை முன்னிலைப்படுத்தும் யோசனைக்கு, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ் ஸ்ரீதரன் உத்தியோகபூர்வமற்ற முறையில் இணக்கத்தை தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அது எவ்வாறாயினும், வடக்கின் வாக்குகள் அனைத்தையும் தனக்கு பெற்றுக்கொள்வதே, ஜனாதிபதி ரணிலின் யோசனையாக இருக்கிறது. இதற்காக, தமிழ் டயஸ்போரா உடன் இணைந்து, அவர் களப்பணிகளை ஆரம்பித்திருக்கிறாராம். வடக்கைப் போன்றே மலையகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள, இந்தியாவின் உதவியை நாட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதற்காகத்தான், கடந்த சில தினங்களுக்கு முன்னர், சாகல ரத்நாயக்கவை அவர் திடீரென இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். சாகலவின் இந்திய விஜயம் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாவதற்கான அனைத்துப் பணிகளையும், ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகிறார். அதாவது இந்த வாரத்தின் பின்னர் முக்கிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகப் போகிறார்கள் என்பது உறுதியாகப் போகிறது. அதோடு ஏற்படவுள்ள அரசியல் சூடுபிடிப்புகள் தொடர்பான தகவல்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சந்திக்கிறோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி