ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியின் அனைத்து தொகுதி

அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை, இன்றைய தினம் (30), கட்சி தலைமையகத்திற்கு அழைத்திருந்தார்.

சில சிறப்பு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை ஆரம்பமான இந்தக் கூட்டத்துக்கு, நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் இணைந்துகொண்டார்.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, எதற்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார் என, கூட்டத்தில் இருந்த அனைவரும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான சட்ட நிலவரங்களை விளக்குவதற்காகவே, நீதியமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தகவல்களைத் தெரிந்துகொள்ளவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக, கூட்டத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர், “தற்போது போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், சுமார் 30% வாக்குகளை மாத்திரமே பெற முடியும் என்றும், அவையும்  மிதக்கும் வாக்குகளாகவே காணப்படும் என்றும் கூறினார்.

அந்த 70% மக்களைத் திரட்டக்கூடிய பலம் வாய்ந்த அரசியல் முகாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் கிராமங்களிலும் பெருமளவான மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கின்றனர், எனவே, நாடு வீழ்ச்சியடைந்துள்ள இத்தருணத்தில் இருந்து சுதந்திரக் கட்சியை சிறந்த முகாமைத்துவத்துடன் கட்டியெழுப்பினால், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின்போது, ஆட்சியைப் பிடிக்க முடியுமென்றும், அமைச்சர் விளக்கினார்.

கூட்டத்தின் பின்னர், அங்கு கூடியிருந்த பலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகுமாறு, நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பரிசீலிக்கத் தயார் என, நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி