ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகளிலிருந்து விலகி, வேறு கட்சிகளில் இணைந்துகொண்டவர்கள்

மற்றம் சுயேட்சையாகச் செயற்படுபவர்களை, மீண்டும் தங்களது கட்சியில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில், அவ்விரு கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், மேற்படி கட்சிகளிலிருந்து விலகி, வேறு கட்சிகளில் இணைந்துகொண்டவர்கள் மற்றம் சுயேட்சையாகச் செயற்படுபவர்களை, மீண்டும் தங்களது கட்சிகளுக்கு வருமாறு, பகிரங்கமாகவே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், “ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்களுக்கு தற்போது அங்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை. அதனால் எமது நண்பர்கள் தொடர்ந்தும் அங்கிருந்து அசிங்கப்படாமல் தங்களின் தாய் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டும்” என்று, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் எமது நண்பர்கள் மீண்டும் தங்களது தாய் வீட்டுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இடம் இல்லை. அதனால் தொடர்ந்தும் எமது நண்பர்கள் அங்கு இருப்பதால், அவர்கள் கோழைகளாக்கப்பட்டு மலினப்படுத்தப்படும் நிலையே ஏற்படும்.

“தாய் கட்சியின் செயலாளர் என்றவகையில் பொறுப்புடன் இந்த அழைப்பை விடுக்கிறேன். ஐக்கிய தேசிய கட்சியின் கதவு எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும். மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“அரச தலைவராக இருந்து அவர் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றத் தவறினாரா அல்லது அவரை அறியாமல் இந்த தாக்குதல் இடம்பெற்றதா என்பதை நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, “மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன. ஆகவே பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது” என, ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோல்வி அடைந்து முழு நாட்டையும் பழிகொடுத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய அரசியல் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.

“மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த செல்வாக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் அளவுக்கு உயர்வடையாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமாக இருந்தவர்கள் பல்வேறு காரணிகளினால் இன்று விலகிச் செயற்படுகிறார்கள்.

“இவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உட்பட கட்சியின் சகல உறுப்பினர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி