ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது எனக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அது தொடர்பில்

விளக்கமளிக்க தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (22) தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யுமாறும், அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உத்தரவாதம் தந்தால், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என, தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும் அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிடத் தயார் எனவும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அத்தோடு, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்தார்.

இந்நிலையில், மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாக கருதப்படும்” என்றும், மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி