இத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர். இந்நிலையில், 20,000 ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்களை மீண்டும் சுகாதாரப் பணிக்கு திரும்புமாறு இத்தாலிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் மூலவளம் குறைந்த தெற்கு பகுதியில் கொரொனாவைரஸ் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என இத்தாலிய அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும், மாநாடுகள், இசை விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடு மற்றும் தடை விதிக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புக்கள் மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centres for Disease Control and Prevention-CDC) ஆகியவற்றின் கணக்கீட்டின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரமாக அமெரிக்காவில் 500 க்கு மேற்பட்ட புதிய கொரொனாவைரஸ் நோயாளிகள் இருந்தனர். இந்த புதிய கொரொனாவைரஸ், மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் 3,500 க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்டுவிட்டது என்பதுடன், 105,000 இற்கு மேற்பட்டவர்களை பாதிப்படையச் செய்துள்ளது.

சீனாவில், ஷாங்காயில் இருந்து Fudan பல்கலைக்கழக மருத்துவர். ஜின் லி உம் மற்றும் அவரது சகாக்களும், கோவிட்-19 என்ற இந்த புதிய தொற்றுநோயின் உலகளாவிய போக்கு ஒவ்வொரு 19 நாட்களுக்கும் பத்து மடங்கு வளர்ச்சி விகிதத்துடன் அதிவேகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்கள் சுமார் 34 கண்டறியப்படாத, அல்லது உண்மையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். இந்த தனிப்பட்ட நபர்கள் தான் சீனாவிற்கு வெளியே இந்த தொற்றுநோயை பரவ விட்டுள்ளனர். ஜனவரி 21 முதல் பெப்ரவரி 28 வரையிலான காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO) வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் ஷாங்காய் மருத்துவர்களின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே கண்டறியப்பட்ட கோவிட்-19 பாதிப்புக்குள்ளான முதல் நோயாளி தாய்லாந்தில் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அவர்களது பொது சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, ஜனவரி 13, 2020 அன்று கண்டறியப்பட்டார். மார்ச் மாதம் முதல் வார முடிவில், 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தற்போது இந்த நுண்கிருமி தாக்குதலுக்கு ஆளான நோயாளிகள் இருப்பதை உறுதி செய்துள்ளன. இது அண்டார்டிக்காவைத் தவிர அனைத்து கண்டங்களையும் பாதித்துள்ளது.

மார்ச் முதல் வாரத்தில், பல சம்பவங்கள் வெளியிலிருந்து தங்கள் நாட்டிற்குள் இறக்குமதியாவதாக தெரிவித்து, 1,400 புதிய தொற்றுநோயாளிகள் இருப்பதாக மட்டுமே சீனா அறிவித்த அதேவேளை, தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சீனாவை விஞ்சும் வகையில் புதிய நோயாளிகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரிப்பதாக செய்தி வெளியிட்டன. ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட யூரோ மண்டலத்தின் மையப் பகுதியும், அதேபோல நோயாளிகளின் அதிரடி அதிகரிப்பை கண்டது. ஸ்காண்டிநேவிய நாடுகள் இந்த தொற்றுநோய் பாதிப்பில் முன்னணியில் உள்ளன.

பெப்ரவரி 18 முதல் மார்ச் 2 வரையிலான காலகட்டத்தில், சீனாவிற்கு வெளியே கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 999 இல் இருந்து 10,288 ஆக உயர்ந்தது. Worldmeter வலைத் தளத்தின் புள்ளி விபரப்படி, சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளின் கோவிட்-19 இன் புதிய பாதிப்பாளர்களின் அதிகரிப்பு குறித்த மடக்கை வளைவு உயர்ந்து கொண்டே சென்றது. இது, சர்வதேச சமூகத்தின் எந்தவொரு குறிப்பிடத்தக்க தலையீடும் இல்லாமல், சீனாவிற்கு வெளியே இந்த தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை மார்ச் மாத மத்தியில் 100,000 ஐ எட்டும் என்பதையும், ஏப்ரல் முதல் வாரத்தில் 1 மில்லியனை நெருங்கக்கூடும் என்பதையும் குறிக்கிறது.

இதேபோன்ற மிக விரைவான நோய்தொற்று பரவலில் 2009 இல் பன்றிக் காய்ச்சல் (H1N1 Swine flu) பரவியது குறிப்பிடத்தக்கது. என்றாலும், H1N1 தொற்றுநோய்க்கும் இந்த தொற்றுநோய்க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், தொற்றுநோயின் தீவிரத்தன்மையாகும். பன்றிக் காய்ச்சல் 100 மடங்கு ஆபத்து குறைவானது. அதாவது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பில்லியன் பேரில் சுமார் 500,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 உடன் தொடர்புடைய இறப்பு விகிதம் 0.6 சதவிகிதத்தில் இருந்து அண்மித்து 10 சதவிகித அளவிற்கான மட்டத்தில் உள்ளது. மிக சமீபத்தில், தொடர்ந்து பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விகிதத்தை 3.4 சதவிகிதம் என WHO நிர்ணயித்தது. முற்றிலும் முரண்படுவதாக, அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கவலைக்குரிய இறப்பு விகிதங்களை அறிவித்தன, அதேவேளை தென் கொரியா மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. ஜேர்மனியில் தற்போது 951 கொரொனாவைரஸ் நோயாளிகள் உள்ளனர், இதுவரை 2 இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளன.

இந்த விகிதங்கள் சில நாடுகளைப் பொறுத்தவரை, நோய் அல்லது நுண்கிருமியின் தீவிரம், மருத்துவ கவனிப்பை கிடைப்பது, மக்கள் ஆரோக்கியம், சுற்றுப்புற வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பிற காரணிகளின் மிக துல்லியமான பாதிப்பை நிரூபிக்கக்கூடிய விரிவான சோதனைக்குப் பின்னர் கண்டறியப்பட்டவையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த நுண்கிருமி 8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் மிகுந்த செயல்திறனைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

சீனாவின் CDC தரவு, இலேசான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தொற்றுநோய்க்குப் பின்னர் தொடர்ந்து நலமாக இருப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. என்றாலும், ஏறக்குறைய 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, கூடுதல் பிராணவாயு வழங்குவது, கூடுதல் பராமரிப்பு, அல்லது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது மற்றும் காற்றோட்டமான சூழலை அதிகரிப்பது ஆகியவை தேவைப்படும். வயதானவர்களுக்கும் மற்றும் பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கோவிட்-19 நோய் தாக்கத்தால் கடுமையான விளைவுகளுடன் கூடிய ஆபத்து அதிகம். வாஷிங்டனில் உள்ள King County மருத்துவமனை போன்ற இடங்களில் சிகிச்சை பெறும் மிகுந்த வறியவர்களுக்கு பெரும் ஆபத்தான விளைவுகளை இது ஏற்படுத்தக் கூடும் என்பதை அமெரிக்காவின் இறப்புக்கள் நிரூபிக்கின்றன. ஃபுளோரிடாவில் பதிவான இறப்பு அறிக்கையின் படி, இத்தாலியில் இருந்து சமீபத்தில் திரும்பிய இரண்டு வயதானவர்கள் இதற்கு பலியாகியுள்ளனர்.

அரசாங்கம், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியிலான பரந்த ஒத்துழைப்பின் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவ கவனிப்பு வழங்கப்படுவதை அணுகுவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. இந்த தொற்றுநோய் பரவ ஆரம்பித்த ஆரம்பகட்ட நாட்களில் சீனாவுக்கு ஏற்பட்ட அனுபவம் பெருமளவிலான மக்கள் மருத்துவமனை நோக்கி விரைந்த நிலையில் வூபே நகர மருத்துவமனைகள் பொது மக்கள் வருகையால் நிரம்பி வழிந்ததை கண்டது. புதிய தொற்று பற்றிய செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் பீதியும் சமூக வேதனையும் ஏற்பட்டு மக்கள் விரக்தியடைந்த நிலையில் நோயுற்றவர்களை மிக அவசரமாக சோதனைக்குட்படுத்த வேண்டியுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் தயார்நிலையில் இல்லாமலிருப்பது மற்றும் பொருள் வளங்களுக்கான குறைந்த வாய்ப்பு ஆகியவை ஜனவரியிலும் மற்றும் பெப்ரவரி மாத தொடக்கத்திலும் காணப்பட்ட அதிக இறப்பு விகிதங்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

சென்ற வார இறுதியில், அரசியலுக்கான ஹார்வார்ட் கென்னடி கல்வி நிறுவனத்தில் (Harvard Kennedy School Institute of Politics) நடந்த சமீபத்திய கூட்டத்தில் வல்லுநர்கள் குழு அதிகரித்து வரும் தொற்றுநோய் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஹார்வார்டின் டி.ஹெச். சான் பொது சுகாதார கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரான மிக்கேல் மினா, “கடந்த அரை நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்திற்குள், நாங்கள் தீவிரமாக எதிர்த்து போராடி வரும் மிகவும் பயங்கரமான நுண்கிருமி இது,” என்று கூறினார்.

தொற்று நோய் மற்றும் பொது சுகாதார செய்தியாளரான ஹெலன் பிரான்ஸ்வெல் (Helen Branswell), “இது மிக வினோதமானது என்பதால் நான் அதிர்ச்சியடைந்து போனேன். பல ஆண்டுகளாகவே இதுபோன்ற சில சாத்தியங்களைப் பற்றி எழுதி வந்துள்ளதால், இது நிகழ்வதைக் கண்டு நான் இன்னும் திடுக்கிடுகிறேன் என்பதுடன், அது என்னவென்று எனக்குத் தெரியாது,” என்று கூறினார். மேலும் டாக்டர் மினா, “நாங்கள் முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளோம். அசாதாரண நடவடிக்கை எதுவுமின்றி ஒரு பெரும் மக்கள்தொகை மிக விரைவாக அழிந்து போவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது” என்றும் கூறினார். ஏனென்றால், இது நூதன, அல்லது புதிய நுண்ணுயிரியாக இருப்பதால், உலக மக்கள் அதற்கு முன்கூட்டியே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை என்பதே அதற்கு காரணம்.

ஜப்பானில் பயணக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சமீபத்திய அதிர்ச்சி தரும் பிழைகள் பற்றி குறிப்பிட்டு, சோதனை கருவிகளை உற்பத்தி செய்வதிலும், விநியோகிப்பதிலும் ஏற்பட்ட படுதோல்வி, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முற்றிலும் பிற்போக்குத்தனமான அவர்களது வெறும் வார்த்தையாடல்கள் ஆகியவற்றால் அதிவேகமான இந்த தொற்றுநோய் பரவலுக்கு பதிலிறுக்க அமெரிக்கா வழியற்றுப் போயுள்ளது. தற்போது 33 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. நியூயோர்க், கலிஃபோர்னியா மற்றும் வாஷிங்டன் ஆகியவை, கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் விடயங்களை நிர்வகிக்க தேவைப்படும் நிதி மற்றும் ஆதாரவளங்களைப் பெறுவதற்கு அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில், அமெரிக்காவில் இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதிவான 451 நோயாளிகளில் 300 க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தற்போதைய முறிந்துபோன தன்மை என்னவென்றால், மருத்துவமனைகள் அவற்றின் அவசரகால துறைகள், மூலவளங்கள், நிபுணர்கள் மற்றும் நிர்வாகத் துறைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒத்துழைப்பை வழங்கவில்லை. வரையறுக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டங்களையும் மற்றும் பற்றாக்குறையான வளங்களையும் கொண்டு செயல்படுகின்ற பல மருத்துவ வசதிகளின் செயல்பாட்டைக் கொண்ட நகர்புற சமூகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு நீண்டகால மூலோபாய அவசர திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவசர தேவை அங்கு உள்ளது.

டாக்டர் மினாவைப் பொறுத்தவரை, “நான் இங்கு தோல்வியுற்ற நபராக குரல் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் நமது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நிலை, பெரும்பாலும், அதைப் பற்றிய அனைத்தையும் நாங்கள் தனியார்மயமாக்கிய விதம் நமது திறனை தீவிரமாக பாதிக்கும். எங்களால் புதிய நீல நிற மருத்துவமனை படுக்கைகளை உருவாக்க முடியாது. எங்களால் சரியாகக் கூட பரிசோதித்துப் பார்க்க முடியாது” என்கிறார். இந்த நுண்கிருமியை சீனா உலகத்திற்கு கொண்டுவந்ததில் இருந்து நான்கு முதல் ஆறு வாரங்களை தற்போதைய நிர்வாகம் நாசமாக்கிவிட்டது என்பதை அனைத்து நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். அதேவேளை, ட்ரம்ப் நிர்வாகம் இது குறித்து குற்றகரமாக அலட்சியத்துடன் இருக்கும் நிலையில், தனியார் சுகாதார காப்பீட்டாளர்கள், மருந்தகங்கள் மற்றும் பெரும் சுகாதார பாதுகாப்புத்துறை சங்கிலிகள் என அனைத்னதும் இலாபங்களுக்கு அமெரிக்க சுகாதார பாதுகாப்புத் துறை அடிபணிந்து கிடப்பதால் இந்நிலைக்கு இறுதியில் அதுவே பொறுப்பாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி