1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த தனது கணவர் காணாமல் போனது குறித்து உண்மையான விசாரணையை தொடங்க வைப்பதற்கு சந்தியா எக்னெலிகோடாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.

ஆனால் கடந்த நவம்பரில் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், முக்கியமான விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதில், நிலைமைகள் மாறும் என்று அவர் உணர்ந்தார்.

கொழும்பு நகருக்கு வெளியே அவருடைய வீட்டில் ஒரு மணி நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது சந்தியா எக்னெலிகோடா வெளியில் எட்டிப்பார்த்தார்.

''நீங்கள் இங்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருப்பது குறித்து இந்நேரம் காவல் துறையினருக்கு தகவல் சென்றிருக்கும்,'' என்று வறட்சியான சிரிப்புடன் அவர் கூறினார்.

தாம் கண்காணிக்கப்படுவதாக அவர் நினைக்கிறார். ஏனெனில் இலங்கையின் புதிய அரசியல் தலைமைக்கு இடையூறாக அவர் இருப்பதால் இப்படி கருதுகிறார். அரசு மாறியுள்ளதால், சூழ்நிலைகள் கணிசமாக மாறும் என்று நிறைய பேர் நினைப்பது நிச்சயமான உண்மைதான்.

சிலருக்கு சங்கடம் தந்துள்ள வெற்றி

சில வாரங்களுக்கு முன்பு, 2019 நவம்பர் 16 ஆம் தேதி, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார்.

புதிய ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான். தனது சகோதரர் மஹிந்தா ராஜபக்ஷ தலைமையிலான அரசில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தவர். ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரை ஒரு தசாப்தத்துக்கு முன்பு முடிவுக்குக் கொண்டு வர முக்கியக் காரணமாக இருந்தவர்.

இரு தரப்புகளிலும் மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், கட்டாயமாக காணாமல் போகச் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் நிறைந்த போராக அது இருந்தது.

அப்படி காணாமல் போனவர்களில் ஒருவர் திருமதி எக்னெலிகோடாவின் கணவர்.

பிரகீத் எக்னெலிகோடா கார்ட்டூனிஸ்ட்டாகவும், மகிந்த ராஜபக்க்ஷ அரசை கடுமையாக விமர்சிப்பவராகவும் இருந்தார். 2010ல் போர் முடிந்து பல மாதங்கள் கழிந்து ஒரு நாள் அதிகாலையில் வீட்டை விட்டுச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.

ஆறு மாதங்களுக்கு முன்னதாக அவர் கடத்தப்பட்டு, வெள்ளை வேனில் இருந்தவர்களால் விசாரிக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் காணாமல் போனவர்களை அடையாளப்படுத்துவதாக வெள்ளை வேன்கள் இருந்தன. அவர்கள் யாருக்காக அப்படி செய்தார்கள் என்பது தமக்குத் தெரியும் என்று தன் குடும்பத்தினரிடம் அந்தப் பத்திரிகையாளர் கூறியிருந்தார்.

ராஜபக்க்ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, பழைய காயங்கள் மற்றும் பகைமைகளை புதுப்பிப்பாக இருக்கும் என்று பலரும் அஞ்சுகின்றனர், ஆனால் அதுபற்றிப் பேச பயப்படுகின்றனர்.

இருந்தபோதிலும், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைக்கு திருமதி எக்னெலிகோடா சென்றுவிட்டார். தன்னுடைய கணவர் காணாமல் போனது குறித்த செய்தி உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பெறும்படி அவர் செய்துவிட்டார்.

2015ல் மகிந்த ராஜபக்க்ஷ தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தான் இந்த வழக்கில் முறையான விசாரணை தொடங்கியது என்று அவர் கூறுகிறார். அப்போதைய சி.ஐ.டி. பிரிவின் டைரக்டர் ஷானி அபய்சேகரா அந்த வழக்கை விசாரித்து வந்தார். தன் கணவரின் வழக்கு தொடர்பான கோப்புகள் மற்றும் ஆதாரங்களை அவரிடம் நேரடியாக எக்னெலிகோடா ஒப்படைத்துள்ளார்.

கடந்த நவம்பரில் கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்த தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த சில நாட்களில் நவம்பர் 11 ஆம் தேதி ராணுவ புலனாய்வு அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக, இறுதியில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது.

‘இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான பார்வை கவலை அளிக்கிறது’ -ஐ.நா. ஆணையர்

இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியில் ராணுவம் - செயற்பாட்டாளர்கள் கவலை

இலங்கையின் வடக்கு மத்திய மாகாணத்தில் கிரிட்டலே ராணுவ முகாமில் இருந்து செயல்படும் நிழல் பிரிவில் அந்த அதிகாரிகள் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இலங்கை தலைநகரில் இருந்து இந்த இடம 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கார்ட்டூனிஸ்ட் அந்த முகாமுக்குதான் கொண்டு செல்லப்பட்டார் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால், 9 பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் குற்றப்பத்திரிகை உள்ள போதிலும், எல்லாமே மாறிவிட்டது.

"குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிரதான நபர் ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த காவல் துறையினர் மாற்றப்பட்டுள்ளனர். எங்கள் குடும்பத்தினர் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது'' என்று திருமதி எக்னெலிகோடா கூறுகிறார். கண்காணிப்பு குறித்த குற்றச்சாட்டை புதிய அரசு மறுக்கிறது.

அபய்சேகராவும் கூட, தேர்தல் முடிந்து ஒரு வார காலத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டார். இது பதவியிறக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

``இப்போது எனக்கு நீதி கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை'' என்று திருமதி எக்னெலிகோடா கூறுகிறார்.

பழைய ராணுவ நண்பர்களை `மன்னித்தல்'

நாட்டில் நீண்ட காலம் போர் நடந்து வந்த போது, சுமார் 20,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்று பல்வேறு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. இதில் தமிழர்கள், உரிமை செயற்பாட்டாளர்கள், அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் திரு. எக்னெலிகோடா உள்ளிட்ட போர் நடந்த பகுதிக்கு வெளியில் இருந்து எழுதி வந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். அதில் சுமார் 5,000 ராணுவத்தினரும் இருக்கிறார்கள் என்றும் தோராயமான மதிப்பீடுகள் கூறுகின்றன.

ஆனால் போர் முடிந்தவுடன், போர்க் குற்றங்கள் மற்றும் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டது போன்ற புகார்கள் பற்றி விசாரிக்க அரசு ஆணையம் அமைத்து, சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்புவதற்கான முயற்சிதான் என்று பலரும் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு பிபிசிக்கு பேட்டியளித்த கோட்டபய ராஜபக்ஷ, காணாமல் போகச் செய்ததாகக் கூறப்படும் புகார்களில் எந்தத் தொடர்பும் இல்லை எ்று கூறியிருந்தார்.

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்த எந்தப் புகாரையும் கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் தீவிரமாக மறுத்து வருகிறது. விடுதலைப் புலிகள்தான் அதுபோன்ற செயலில் ஈடுபட்டார்கள் என்று அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இப்போது உறுதியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ராணுவத்தினருக்கு எதிரான தன்னிச்சையான புகார்களில் சிறிது மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது.

இப்போது நாட்டில் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சண்டையில் பங்கேற்க தங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு, இப்போது தூற்றுதலுக்கு ஆளாகியிருக்கிறோம் என அவர்கள் கருதுகிறார்கள்.

மனித உரிமை மீறல் குறித்து ``உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்'' கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விடுதலை செய்து, மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்வதாக, சிங்களர்கள் அதிகம் வாழும் நாட்டின் தென் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோட்டபய ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார்.

அந்த வாக்குறுதியை புதிய அரசாங்கம் உடனே நிறைவேற்றத் தொடங்கிவிட்டது.

கொழும்பு பகுதியில் 2008 - 2009 காலத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டது, காணாமல் போனது குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் மற்றும், 13 பேர் கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் கடற்படையின் செய்தித் தொடர்பாளராக இருந்த கமோடர் டி.கே.பி. தசநாயகே சில வாரங்களில் ரியர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுக்கிறார்.

இதற்கிடையில், முந்தைய அரசால் அரசு அதிகாரிகள், மக்கள் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மற்றும் ராணுவத்தினர் யாராவது பழிவாங்கப்பட்டார்களா அல்லது பாரபட்சமாக நடத்தப்பட்டார்களா என்பதைக் கண்டறிய, தேர்தல் முடிந்து சில வாரங்களில் ஜனாதிபதி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கை முழுவதுமாக தள்ளுபடி செய்யலாம் என அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய அதிசய உயிர்ப் பாலம்

மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்: புற்றுநோய், மலாய் பாசம், மகாதீர் மீதான அன்பு - யார் இவர்?

இதுபோன்ற அறிவுறுத்தல் அளிக்க அந்த கமிஷனுக்கு சட்டபூர்வ அதிகாரம் எதுவும் இல்லை என்று கூறிய அரசின் அட்டர்னி ஜெனரல், இந்த வழக்கு விசாரணை தொடர வேண்டும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

சந்தியா எக்னெலிகோடா போன்றவர்களுக்கு பயணத்தின் திசை தெளிவாகிவிட்டது;தங்களுடைய பழைய சகாக்கள், எந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருந்தாலும், மன்னித்து அனுப்புவதில் அரசு தெளிவாக இருக்கிறது என்று அவரும், மற்ற விமர்சகர்களும் கூறுகின்றனர்.

ஆனால் அடிப்படை அளவில் உடனடியாக சிஐடி பிரிவு மாற்றி அமைக்கப் பட்டிருப்பது முன்னாள் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறைக்குள் அந்தப் பிரிவுக்கு கொஞ்சம் சுதந்திரம் உண்டு. கொலைகள், வணிகக் குற்றச் செயல்கள், உயர் நிலை குற்றங்களை விசாரிக்க, அதிக திறமை வாய்ந்தவர்கள் அந்தப் பிரிவுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். பெரும்பாலான அதிகாரிகள் அந்தத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளனர். இதனால் அவர்கள் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

பெரிய இடத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தும் அளவுக்கு அச்சமின்றி செயல்பட்டதால், தனக்கென ஒரு நற்பெயரை அந்தத் துறை சம்பாதித்துள்ளது.

தேர்தல் முடிந்து சில நாட்களில், அபய்சேகராவின் துணை அதிகாரிகளில் ஒருவரான நிஷாந்தா டி சில்வா , பாதுகாப்பு கருதி சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டார். தீவிரமாக செயல்பட்ட அரசு நிர்வாகம், நாட்டை விட்டு வெளியேற 700க்கும் மேற்பட்ட சிஐடி அதிகாரிகளுக்குத் தடை விதித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷ அதிபராக இருந்த போது 2011ல் நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தாம் பேசிய தொலைபேசி உரையாடலை வெளியில் கசிய விட்டுவிட்டார் என்று காரணம் கூறி, ஜனவரி மாதம் அபய்சேகரா தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

வணிகத்தில் தமிழ்: தமது மொழிப் பற்றை வித்தியாசமாக வெளிப்படுத்தம் இலங்கை இளைஞர்

கொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன?

இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் யு.என்.பி. கட்சிக்கு ஆதரவாக, அரசியல் தூண்டுதலுடன் சிஐடி பிரிவு செயல்பட்டது என்று அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

``சில விசாரணைகளில் சிலர் பாரபட்சமாக இருந்திருக்கலாம்'' என்று காவல் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலும், மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகருமான சந்திரா பெர்னாண்டோ பிபிசியிடம் கூறினார். ``அதுபோன்றவர்களை அந்தப் பதவிகளில் நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியாது'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சிஐடி கையாண்ட வழக்குகளை பார்த்தால், புதிய அரசுக்கு என்ன நிகழவிருக்கிறது என்று தெரிகிறது.

அபய்சேகராவும், டி சில்வாவும் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பல வழக்குகளை விசாரித்துள்ளனர். பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா கொலை உள்ளிட்ட வழக்குகளை அவர்கள் விசாரித்துள்ளனர். அவர் 2009ல் கொழும்பு நகரில், பரபரப்பாக இயங்கும் சாலையில் பணிக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத ஆண்களால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

ராஜபக்ஷ சகோதரர்களை கடுமையாக விமர்சித்து வந்த அவர், அந்த காலக்கட்டத்தில் பாதுகாப்புத் துறை கொள்முதல்களில் ஊழல்கள் நடந்திருப்பதாக எழுதியிருந்தார்.

அந்த வழக்கு 2015ல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. திரு. எக்னெலிகோடாவின் வழக்கு எடுக்கப்பட்ட அதே ஆண்டில் - அதில் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். 2016 ஆம் ஆண்டில், அதற்கு தாம் தான் பொறுப்பு என்றும், மற்றவர்கள் அப்பாவிகள் என்றும் குறிப்பு எழுதி வைத்துவிட்டு ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானதை அடுத்து அதில் திருப்பம் ஏற்பட்டது.

The Nation பத்திரிகையின் உதவி ஆசிரியர் கெயித் நோயாஹிர் அடித்து, கடத்தப்பட்டது தொடர்பான மற்றொரு வழக்கும் விசாரிக்கப்பட்டது. ராஜபக்ஷ அரசு மாறி, புதிய அரசு 2015ல் பொறுப்பேற்ற பிறகு நடந்த விசாரணையில், மேஜர் ஜெனரல் ஒருவர் உள்பட ராணுவத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இரு சகோதரர்களுக்கு எதிரான வழக்குகளுக்கு என்ன ஆகும்?

தங்களுக்கும் இப்போது அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதாக, ஊடகத் துறையில் இருக்கும் பலரும் தெரிவிக்கின்றனர்.

``இப்போது சுய தணிக்கை செய்து கொள்வதைப் போன்ற மனநிலை காணப்படுகிறது. எல்லோரும் பின்வாங்குகிறார்கள்'' என்று தேர்தலின் போது ராஜபக்ஷ சகோதரர்களை விமர்சித்த Newshub இணையதளத்தில் பணியாற்றும் கிஹன் நிகோலஸ் கூறுகிறார்.

கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் அதன் அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் அரசுக்கு எதுவும் தொடர்பு இருப்பதாக ``தெரியவில்லை'' என்று ராஜபக்ஷ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். இரு சகோதரர்களுக்கும் எதிரான உயர் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு இப்போது உரிய சட்ட அனுமதி கிடைக்காமல் போகும் என்ற புகார்களை அவர் மறுத்தார்.

``நீதித் துறையில் நாங்கள் ஒருபோதும் தலையிட மாட்டோம். நீதித் துறை தானாகவே வழக்கை எடுத்துக் கொள்ளும். சட்ட விவகாரங்களில் தலையிடும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை'' என்று கெஹலியா ரம்புக்வெல்லா பிபிசியிடம் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் நிலை என்ன?

ஆனால் தங்கள் பாசத்துக்கு உரியவர்கள் பற்றி ஏதும் தகவல் கிடைக்குமா என்று இன்னும் காத்திருப்பவர்களின் நிலை என்ன? தங்கள் கவலைகளை வெளியில் தெரிவிக்கும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள் மட்டுமல்ல, போர் வன்முறை அதிகம் நிகழ்ந்த வடக்குப் பகுதியைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் மனைவியர்களின் நிலை என்ன?

தங்கள் குடும்பத்தினர் ராணுவத்திடம் சரணடைந்த பிறகு, அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று நூற்றுக்கணக்கான, அது ஆயிரக்கணக்காகவும் இருக்கலாம், தமிழ் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

வடக்கில் உள்ள கிளிநொச்சி நகரைச் சேர்ந்த கந்தசாமி பொன்னம்மா என்ற மூதாட்டி - இன்னும் பதிலுக்காக காத்திருக்கிறார். அவரைப் போல பலரும் காத்திருக்கிறார்கள்.

``சரணடைந்த பிறகு, என் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளை இலங்கை ராணுவத்தினர் ஒரு பேருந்தில் ஏற்றிச் சென்றதை நான் பார்த்தேன். அவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்னவானது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை'' என்று பொன்னம்மா கூறுகிறார்.

பல ஆண்டு கால சர்வதேச நெருக்கடியைத் தொடர்ந்து காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைக்கு 2018ல், அலுவலகம் திறக்கப்பட்ட போது, அவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்த அலுவலகம் வேலையைத் தொடங்கிய நிலையில் இப்போது தேர்தல் முடிந்துவிட்ட பிறகு, அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

``காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கும் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றிய உள்நாட்டு உரிமைகள் குழுக்களுக்கு ஏற்கெனவே நெருக்கடிகள் வந்துவிட்டன. ராணுவப் புலனாய்வுத் துறையினர் அந்த அலுவலகங்களுக்குச் சென்று, அவர்களுக்கு எப்படி நிதி கிடைக்கிறது என்பது பற்றி விசாரித்துச் சென்றுள்ளனர்'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத செயற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை கோட்டபய ராஜபக்ஷ மறுக்கிறார். ஆனால் வெளியிட்ட தகவல் குழப்பமாக உள்ளது - ஜனவரியில் ஐ.நா. அதிகாரிகளிடம் இதுபற்றி கூறிய அவர், காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மக்களின் கோபமும் வெறுப்பும் அதிகரித்த நிலையில், அதிகாரிகள் பின்வாங்கினர். காணாமல் போன மக்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கட்டாயமாக தங்கள் அணியில் சேர்க்கப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால் பத்திரிகையாளர்கள் காணாமல் போனது மற்றும் கொலை செய்யப்பட்டது, இளைஞர்கள் கடத்தப்பட்டது, அல்லது போர் முடிந்தபோது பிடித்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் தலைவிதி என பல விஷயங்கள் பற்றிய கேள்விகளில் இருந்து அரசு தப்ப முடியாது. ஆயிரக்கணக்கான உறவினர்கள் பதில்களுக்காக காத்திருக்கிறார்கள்.

பல ஆண்டு கால உள்நாட்டுப் போர் காரணமாக பாதித்திருந்த நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கியதற்காக பாராட்டப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால் கடந்த கால கெடுதல்களுக்கு நியாயமான பதில்கள் அளிக்காமல், எதிர்காலத்துக்கு திட்டமிடுவது சிரமமானதாக இருக்கும் என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், தன்னுடைய கணவர் காணாமல் போனது தொடர்பான வழக்கில் விசாரணை தொடரும் நிலையில், தனது கணவர் உயிருடன் இருக்க மாட்டார் என்று கருதிக் கொள்ள வேண்டியவராக இருக்கும் சந்தியா எக்னெலிகோடா, கேள்வி எழுப்பியவாறு காத்திருக்க வேண்டும்.

நன்றி BBC

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி