தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை எதிர்க்கட்சியான தி.மு.கவும் ஆளும் அ.தி.மு.கவும் வெளியிட்டு வருகின்றன. அதிலும், தமிழகத்தில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதுதவிர, 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்கள் 8,97,694 பேரும் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களை ஈர்க்கும் வகையில், `இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை கமல் வெளியிட்டார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, `தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் தி.மு.க சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாக, `ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்' என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இது தொடர்பாகப் பேசிய ஸ்டாலின், ` தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்' என்றார்.

தி.மு.கவின் இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசன், ` எங்கள் திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார். குடும்ப பெண்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது தொடர்பான திட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் எழுதி வைத்த காகிதங்கள் பறந்து சென்று ஸ்டாலின் கையில் துண்டு சீட்டாக தஞ்சமடைந்துள்ளது. இதை படித்துதான் அவர் திட்டங்களை அறிவிக்கிறார். அவர்களிடம் உண்மையில் எந்த திட்டங்களும் இல்லை' என்றார்.

தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்

இந்நிலையில், மகளிர் தினமான நேற்று பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `` தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம். மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் எங்களின் தேர்தல் அறிக்கை இருக்கும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்' என்றார். மேலும், அவர் பேசுகையில், ` அ.தி.மு.க. அறிவிக்க இருந்தது முன்கூட்டியே கசிந்துவிட்டதால் தி.மு.க. அதை அறிவித்துவிட்டது' என `குடும்பத் தலைவிகளுக்கான நிதியுதவி' குறித்துக் குறிப்பிட்டார்.

கமல்

கடன் 5 கோடி... திட்டம் சாத்தியமா?

இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி திட்டத்துக்கு மூன்று கட்சிகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில், `இப்படியொரு அறிவிப்பு சாத்தியமா?' என தமிழ்நாடு திட்டக் கமிஷன் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` திட்டங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று வளர்ச்சித் திட்டங்கள், இன்னொன்று சமுதாய நலத் திட்டங்கள். தமிழ்நாட்டின் கடன் 5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்தக் கடன் என்பது எரிவாயு சிலிண்டர் அல்லது சத்துணவு திட்டம் போன்றவற்றுக்கான முதலீடுகள் அல்ல.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக எவ்வளவோ திட்டங்களைக் கொண்டு வருகிறோம். பல சிப்காட்டுகளை உருவாக்குகிறோம். அங்கு மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகளை செய்து தருகிறோம். சர்வதேச தரத்தில் சாலைகளை அமைத்து முதலீடுகளை ஈர்க்கிறோம். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வருகிறோம். போர்டு, ஹூண்டாய் கம்பெனிகள் 5 லட்சம் கோடிகளுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. சிப்காட் மலர்ந்து வேலைவாய்ப்புகள் பெருகும். எங்களுடைய நிதியும் பெருகும்" என்கிறார்.

எடப்பாடி கமல் ஸ்டாலின்

தொடர்ந்து பேசுகையில், `` இவற்றில் இருந்து வரும் வருவாய் மூலம் நபார்டு வங்கிக்குப் பணத்தைக் கொடுப்போம். வங்கிகளுக்கு மாநில அரசின் மூலம் உத்தரவாதம் கொடுத்து கடன் வாங்குகிறோம். விவசாய பயிர்க்கடனான 12,000 கோடி ரூபாயை ரத்து செய்துள்ளோம். இது நபார்டு கொடுக்கும் பணம். அவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். எந்தெந்த வழிகளில் எல்லாம் அரசுக்கு வருவாய் வருகிறது என்பதை கடன் கொடுக்கும் அமைப்புகளுக்குத் தெரியப்படுத்துகிறோம். இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து திட்டங்களை முன்னெடுக்கிறோம். எங்கள் கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் எங்களால் எளிதாக இதனை நடைமுறைப்படுத்த முடியும். அடுத்ததாக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் நிச்சயமாக மத்திய அரசின் உதவி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.

`தேர்தல் அறிக்கை கசிந்து விட்டது என்கிறாரே முதல்வர்?' என்றோம். `` உண்மைதான். கடந்த 10 நாட்களாக நாங்கள் இது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். ஆர்வக்கோளாறு காரணமாக யாரோ சிலர் வெளியில் கூறி விட்டனர். அவர்கள் எல்லா இடத்திலும் ஒற்றர்களை வைத்திருக்கிறார்கள். 100 பேர் உள்ள இடத்தில் 2 பேர் நுழைவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அடுத்து சில முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார். அவை வெடிகுண்டுகளாக இருக்கும்" என்றார் சிரித்தபடியே.

இதையடுத்து, அ.தி.மு.கவின் குற்றச்சாட்டு தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவோம் என்பதை எங்கள் கட்சியின் தலைவர் தெரிவிப்பார். நான் எதையும் கூற விரும்பவில்லை" என்றவரிடம், ` அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே?' என்றோம். `` அவர்களின் தேர்தல் அறிக்கையை நாங்கள் காப்பியடிக்கவில்லை. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொய் சொல்வதையே அ.தி.மு.கவினர் தொழிலாக வைத்துள்ளனர். அவர்கள் தெரிவித்துவரும் பல பொய்களில் இதுவும் ஒன்று" என்றார்.

எடப்பாடி கமல் ஸ்டாலின்

தி.மு.க, அ.தி.மு.கவின் அறிவிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` முதியோர் உதவித்தொகை, கர்ப்பிணி உதவித்தொகை ஆகியவை போல் இதுவும் சாத்தியமே. இதற்கு தகுதியாக குறிப்பிட்ட ஆண்டு வருமானம் என்ன என்பதை பின்னர் குறிப்பிடப்படலாம். மாநிலத்தில் குடும்ப ஆண்டு வருமானத்தை உயர்த்துவதற்கான வழி, பெண்களின் கையில் நிதி அளிப்பது ஆகும். மாநிலத்தின் கடன் தொகை என்பது சிறப்பான நிதி நிர்வாகம் மூலம் சரிசெய்யக்கூடியதே. குடும்பத் தலைவிகளுக்கு நிதி அளிக்கும் இத்திட்டம் பிற மாநிலங்களிலும் விரைவில் பின்பற்றப்படலாம். அதே சமயம் புதிய நிதி ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படுவது அவசியம்" என்கிறார்.

அதேநேரம், தி.மு.க அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி என்ற திட்டத்தை ஐபேக் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இது குறித்து ஐபேக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` இல்லத்தரசி என்பது வேறு; குடும்பத் தலைவி என்பது வேறு. இல்லத்தரசி என்பது வீட்டில் உள்ள குடும்பப் பெண்களைக் குறிப்பிடும். இவர்களைத்தான் கமல் குறிப்பிடுகிறார். ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு என அறிவித்துள்ளார். ரேசன் கார்டின்படி அவர்கள் வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் குடும்பத் தலைவிகள்தான். அவர்களுக்குத்தான் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிப்போம் என தி.மு.க சொல்கிறது" என்கிறார்.

தொடர்ந்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பேசுகையில், ``குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக 20 பேர் கொண்ட குழு அமர்ந்து பேசியது. தி.மு.க தரப்பிலும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையைக் கொடுத்தனர். தேர்தல் அறிக்கைக் குழுவில் உள்ளவர்களோடும் விவாதித்தோம். தமிழ்நாட்டில் 2.02 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. இது கணக்கெடுப்பதற்கான குறியீடு மட்டுமே. இதன்படி, 2 கோடியே 1,50,000 மகளிர் வருவார்கள். மீதமுள்ள 50,000 பேர் இந்த நிதிதவியின்கீழ் வருவார்களா என்பதை ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க அறிவிக்கும். இவர்களின் வங்கிக் கணக்குக்கு மாதம்தோறும் பணம் சென்றுவிடும்" என்கிறார்.

மேலும், `` 2 கோடி வீடுகளில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் சென்று சேரும். அப்படிப் பார்த்தால் 24,000 கோடி ரூபாய் செலவாகும். 2020- 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் என்பது 3 லட்சம் கோடிக்கும் மேல். நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி) என்பது 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவற்றில் 24,000 கோடிகளை செலவிடுவது மிக எளிதானது. தமிழ்நாட்டின் ஜி.டி.பியை ஒப்பிட்டால் இது வெறும் 1 சதவிகித தொகை மட்டுமே. பட்ஜெட்டின்படி பார்த்தால் 8 சதவிகிதம் வருகிறது. 2 கோடி மக்களுக்கு நல்லது செய்வதற்காக 8 சதவிகிதத்தை ஒதுக்குவது என்பது பெரிய விஷயமல்ல" என்கிறார்.

மகளிர் வாக்குகளை முன்வைத்து தி.மு.க, அ.தி.மு.க, ம.நீ.ம ஆகிய கட்சிகள் இப்படியொரு திட்டத்தை முன்வைத்துள்ளன. இதன்மூலம், `வாக்குகளை அறுவடை செய்யப் போவது யார்?' என்ற

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி