இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு

சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

''கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விடயம் தொடர்பான தரவுகளை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்றே தற்போதைக்குக் கூற முடியும்' என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நிழலுலக குழுக்களின் மோதல்கள், அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள், போதைப்பொருள் பயன்பாட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், அதன் பின்னணிகளும்

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தத் சம்பவங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்தத் துப்பாக்கி சூடு சம்பவங்களில் 46 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தது.

இந்த நிலையில், இலங்கையில் 2025ஆம் ஆண்டின் இதுவரையான 63 நாட்களில் 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் 12 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் திட்டமிட்ட நிழலுலக குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவை எனவும், ஏனைய 7 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்னைகளின் விளைவாக ஏற்பட்டவை எனவும் போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தொடர்பாகவும், மொத்தமாக 64 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே அதிகம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களுடன் தொடர்புடைய 50-க்கும் அதிகமான சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்கள் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸாரிடம் வினவியது.

''இந்தச் சம்பவங்கள் குறித்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதைத் தற்போதைக்கு சரியாகக் கூற முடியாது'' என போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

2025 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

கொழும்பு புதுகடை நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து, பிரபல நிழலுலக தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

வழக்கறிஞர் வேடத்தில் வந்த ஆண் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நிலையில், 8 மணிநேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபருடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணைத் தேடி, 11 போலீஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை சட்ட புத்தகத்திற்குள் மறைத்து மிக சூட்சமமான முறையில் இஷாரா செவ்வந்தியே கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிரதான சூத்திரதாரியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 12 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், போலீஸாரினால் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் உயிருக்கு, நிழலுலக எதிர்தரப்பினால் ஆபத்து காணப்படுகின்றமை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், மித்தெனிய பகுதியில் கடந்த 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகன், மகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூவரும் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் 39 வயதான தந்தை, 9 வயதான மகன், 6 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அதுமாத்திரமன்றி, பமுனுகம, மினுவங்கொடை, வெலிகம, கல்கிஸ்ஸை, அவுங்கல, இனிதும, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் என்ன நடக்கின்றது?

''திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் செயற்படும் இரண்டு இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். ஒன்று மட்டக்களப்பு. மற்றைய இடம் வட மாகாணம். சில தரப்பினரால் தமக்கு செயற்படுத்தக்கூடிய திட்டமிட்ட குழுக்களை உருவாக்கியுள்ளனர். மட்டக்களப்பில் அவ்வாறான குழுவொன்று உள்ளது.

யாழ்ப்பாணத்தில் அவ்வாறான சிறு குழுக்களை உருவாக்கியிருந்தனர். இவற்றை ஒரே நேரத்தில் செயற்படுத்துவதன் பின்னணியில் ஏதோவொரு சூழ்ச்சி காணப்படுகின்றது'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் (மார்ச் 4) அறிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரயம்பதி கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 03) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார்.

கடலில் மிதந்து வந்த மர்மப் பொருளொன்று வெடித்ததிலேயே இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கினாலும், அது திட்டமிட்ட பாரதூரமான சம்பவம் அல்லவென்று பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து வெளியிட முற்பட்ட வேளையில், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

''கௌரவ சபாநாயகர் அவர்களே! மிக முக்கியமான ஒரு விடயத்தை இந்தச் சபையில் எழுப்ப வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆரயம்பதி பிரதேசத்தில் கத்தியால் வாள்வெட்டு சம்பவமொன்று நடந்தது. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (மார்ச் 03) இரவும் கல்லடியில், மட்டக்களப்பு நகரப் பகுதியில் ஒரு வாள்வெட்டு குழுவினால் வாள்வெட்டுச் சம்பவமொன்று நடந்திருக்கின்றது'' என இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர், ''சபை ஒத்தி வைப்பு வேளையில் இது தொடர்பில் உரையாற்றுங்கள். இது தேசிய பிரச்னை கிடையாது'' எனக் கூறிய நிலையில், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

''ஜனாதிபதி அவர்களும் அண்மையில் சொன்னார். மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளே சில குழப்பங்கள் நடக்கலாம், இந்தப் பாதாள உலக குழுக்களினால். நேற்றைய தினம் இரவு நேரத்தில் கல்லடி பகுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு ஆரயம்பதியில் நடந்திருக்கின்றது'' என்று பிரச்னையைக் கூற இராசமாணிக்கம் சாணக்கியன் மீண்டும் முயன்ற வேளையில், 'சந்தர்ப்பத்தை வழங்க முடியாது'' என சபாநாயகர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சபையில் மீண்டும் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, அமளிதுமளியில் ஈடுபடுவோரை சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என சபாநாயகர் எச்சரித்திருந்தார்.

''எமது பிரதேசங்களிலுள்ள மக்களை வாள்களைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டுகின்றார்கள். இந்தப் பிரச்னைகளை இந்த இடத்தில் கூறாமல் எங்கு சென்று கூறுவது? தயவு செய்து நாங்கள் கூறுவதைக் கேளுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். நான் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.

வேறு நபர்கள் கேட்டால் மணித்தியால கணக்கில் பேசுவதற்கு இடமளிக்கின்றீர்கள். ஏன் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்க முடியாது? நாங்கள் எழுந்தவுடன் ஏன் ஒலிவாங்கியை எங்களுக்கு வழங்க முடியாது. ஏன் நாங்கள் தமிழ் மொழியில் பேசுவதை உங்களால் கேட்க முடியாதா?" என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய நிலையில், ''அது இந்தச் சபையின் நடைமுறை' என சபாநாயகர் பதிலளித்திருந்தார்.

''இந்தச் சம்பவம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வர முடியும்'' என சபாநாயகர் மீண்டும் சபைக்கு அறிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சபையில் கருத்துகளை வெளியிட சந்தர்ப்பத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தனர். இருந்த போதிலும், அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காது, சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு பதில் வழங்கியிருந்தார்.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அவசரமாக கவனத்திற்குக் கொண்டு, இந்தப் பிரச்னைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டார்.

நிழலுலக குழுக்களின் மோதல், வாள்வெட்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமூகத்தில் எழுந்துள்ள கேள்விக்கு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் பதில் வழங்கியிருந்தார்.

''தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. பொது மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்படவில்லை என்றதைப் போன்றதொரு விடயத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. இந்த நிழலுலக மோதல்களில் எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும், நிழலுலக மோதல்கள் காரணமாக சமூகத்தில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், எந்தவொரு சாதாரண பொது மக்களினது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்போ அச்சுறுத்தலோ ஏற்படவில்லை. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இரண்டு விடயங்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். ஒன்று இனவாதம். மற்றொன்று அடிப்படைவாதம்" என்று ஜனாதிபதி கூறினார்.

மேலும், "யுத்தத்தினால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்பட்டமையானது, அதனுள் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் காணப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், அதிலம் இனவாதமும் அடிப்படைவாதமும் காணப்பட்டன. இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தைத் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டார்.

திட்டமிட்ட குற்றங்கள், இனவாதத்தில் முன்னேற்றம் தொடர்பான சட்ட வரைபொன்று தேவைப்படுவதாகக் கூறிய ஜனாதிபதி, நிழலுலக குழுக்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்று தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது ஒழிக்கும் கொள்கையிலேயே இருக்கின்றோம். நிழலுலக குழுக்கள் மற்றும் இனவாத செயற்பாடுகளைத் தடுப்பற்கு சாதாரண சட்டம் போதுமானதாக இல்லாத பட்சத்தில், அதற்காகப் புதிய சட்டம் தேவைப்படுகின்றது. அவ்வாறான புதிய சட்டத்தைக் கொண்டு வருவதன் ஊடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்றும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார்.

- பிபிசி தமிழ்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web