52 பேரின் எலும்புக்கூடுகள்
மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி நீதி வழங்குமாறு கோரி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
 
2024ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி, அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பொது மயானத்திற்கு அருகில்  ஒன்று கூடிய வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவருடன் இணைந்து வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனித புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை அவசியமென, ஒரே குரலில் வலியுறுத்தினர்.
 
வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு மனித புதை குழிகளுக்கும் நீதி வழங்கப்படவில்லை எனவும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையதாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
 
“கொக்குத்தொடுவாய் போன்று நான்கு புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நான்கு புதைகுழிகள் குறித்தும் சாட்சிகள் இருக்கின்றபோதிலும் எதுவும் நடக்கவில்லை. அவசரமாக வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது. எங்களது பெறுமதியான உறவுகள், அது எமது உறவுகளாக இருந்தாலும் சரி, போராளிகளாக இருந்தாலும் சரி புதைக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப்பறெ வேண்டும்.”
 
இலங்கையில் நீண்டகாலமாக தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி போராடி வரும் தமிழ் தாய்மார்களை அச்சுறுத்தி மரண சான்றிதழை வழங்க முற்படும் காணாமல் போனோர் அலுவலகம் எவ்வாறு மனித புதைகுழிகளுக்கு நீதி வழங்கும் என அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
 
“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயற்படும் ஓஎம்பி அலுவலகம் புதைகுழிக்கு எவ்வாறு நீதியை பெற்றுத்தரும் என்பது எமது கேள்வி. எனினும் சர்வதேசம் ஏன் ஓஎம்பியை மதித்து அங்கீகரிக்கிறது எனத் தெரியவில்லை.”
 
மூடப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா? என்பதை கண்டறிய ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த பிரதேச ஊடகவியலாளர்களிடம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
 
“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், மன்னார் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், திருக்கேதீச்சரம் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், யாழ்ப்பாணம் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி வேண்டும் - இராணுவம் பொறுப்புக்கூற வேண்டும்” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்ட இந்த போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
 
Kt 1
 
மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு எலும்புக்கூடுகளின் காலம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா குறிப்பிட்டார்.
 
“எத்தனையோ மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளபோதிலும் அவை பல வருடங்களுக்கு முன்னையவை என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. இந்த புதைகுழியில் உடைகள் கூட உக்கிப்போகாத நிலையில் இருக்குமானால் எத்தனை வருடங்கள் ஆடைகள் உக்காமல் இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். 
 
ஆகவே ஆடைகளை அடிப்படையாக வைத்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். எனினும் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும் மனித புதைகுழிகள் குறித்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவர முற்படுகின்றனர்.”  
 
வெகுஜன புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிய சர்வதேச தலையீடு தேவை என்பதையும் அவர் வலுவாக வலியுறுத்தினார்.
 
“மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். புதைக்கப்பட்டவர்கள் யார் என எவருக்கும் தெரியாது. அப்படியான நிலையில் இதில் புதைக்கப்பட்டவர்கள் யார் என்பதே எங்கள் கேள்வி. யார் என எமக்குக் கூற முடியாது. ஆகவே அதனை கண்டறிய சர்வதேச தலையீட்டுடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென சர்வதேசத்திடம் கேட்கின்றோம்.
 
உள்ளக பொறிமுறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில்  காணாமலாக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறையைதான் கேட்கின்றோம். மனித புதைகுழிக்கும் சர்வதேச விசாரணையையே வலியுறுத்துகிறோம்.”
 
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இந்த வருடம் ஓகஸ்ட் 8ஆம் திகதி முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, இந்த ஆய்வுகளின் ஊடாக, பாலினம், வயது, உயரம் மற்றும் காயங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
 
kt2
 
“இந்த அகழ்வின்போது எடுக்கப்பட்ட 25 எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியப் பிரிவிற்கு இடம்மாற்றப்பட்டு கடந்த 2ஆம் திகதி (ஓகஸ்ட் 2) முதல் ஆயு்வுகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. எதிர்வரும் வாரங்களிலும் தொடர்ந்து இடம்பெறும். சட்ட வைத்திய நிபுணர்களின் முழுமையான அறிக்கைககள் ஆறு மாதங்களுக்குள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.”
 
புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அவசரமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுடையதாக இருக்க வேண்டுமென, கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகளுக்கு முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ 2024 மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்ற அனுமானத்திற்கும் அவர் வந்தார்.
 
2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web