“விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்குச்

சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிரும் புதிருமாக நின்று போரிட்டு வருகின்றனர்” என்று, இவ்வாறு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பெரும் விசனத்தோடு கூறியிருக்கின்றார் தயாசிறி ஜயசேகர.

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் முகாம் உதவியாளர்களாக அழைத்து செல்லப்பட்டு ரஷ்ய – உக்ரேனிய போரில் தள்ளப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'நமது இராணுவத்தில் இருந்தவர்கள் ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் இணைந்துள்ளனர். இந்நிலையில், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற நமது இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாமையால்தான் இவ்வாறு நடக்கிறது.

இதற்கு இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம். ஆனால் இன்று இலங்கை இராணுவம் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகிறது.' என அவர் தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர சொல்வது உண்மை. பல சிங்கள அரசியல்வாதிகள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் இயலாமல், வெளியே சொல்லவும் வக்கற்றிருந்த ஒரு விடயத்தை அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானமின்மையால்தான் அவர்கள் இவ்வாறு வெளிநாட்டுப் படைகளில் கூலிப் பட்டாளங்களாக இணைகின்றார்கள் என்று தயாசிறி ஜயசேகர கூறுவதும் சரியானதுதான்.

தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டத்தை பேரினவாத வெறிச் சிந்தனையுடன் அணுகிய தென்னிலங்கை ஆட்சிப் பீடம் அந்தப் போராட்டத்தை 'பயங்கரவாதமாக' சித்திரித்தது. அதை அழிப்பதற்காகப் பெரும் கொடூரங்களைப் புரிந்தது. அந்த கொடூரங்களை - அழிவு நாச வேலைகளை - முன்னெடுப்பதற்காகத் தனது படைத்துறைக்கு கொட்டிச் செலவழித்தது. உலகெங்கும் கையேந்தி, தண்டி, கடன் வாங்கி, நாட்டையும் வீட்டையும் அழித்தது.

ஒருவாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தனது இராட்சத வெறிப்போக்கு அணுகுமுறை மூலம் கொழும்பு அழித்தது என்றாலும், கடைசியில், யுத்தத்தில் தமிழர் தேசம் மீது போர்க் குற்றங்களைப் புரிந்தது, இனவழிப்பைச் செய்தது, இனப்படுகொலையை முட்டாள் அரசின் மூடத்தனம் மேற்கொண்டது, மனித குலத்துக்கு ஒவ்வாத கொடூரங்களை முன்னெடுத்தது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்றெல்லாம் அவப்பெயரை சர்வதேச மட்டத்திலும், ஜெனிவாவில் ஐ.நா மனி  உரிமைகள் கவுன்ஸிலிலும் சுவீகரித்துக்கொண்டது இந்தச் சிங்கள பேரினவாத நாடு.

இந்தக் கொடூரங்களுக்கான பொறுப்பு கூறலும், சர்வதேச விசாரணைகளும் இலங்கை தேசத்தின் தலை மீது கத்தியாகத் தொங்கிக்கொண்டு கிடக்கின்றது.

இந்தக் கொடூரங்களைப் புரிந்த குற்றங்களுக்காக மேற்கு நாடுகளுக்குச் செல்ல அஞ்சி நாட்டுக்குள் முடங்கி, குறுகிக் கிடந்த இராணுவத்தினரும், இராணுவ அதிகாரிகளும் தமது அனுபவத்துடன் வெளிநாட்டில் நிதி உழைப்பதற்கு அமெரிக் காவுக்கும், கனடாவுக்கும், பிரிட்டனுக்கும், ஜேர்மன், பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்குமா போக முடியும்? அதனால் இன்று கூலிப் பட்டாளங்களாக – தமது முன்னைய மனித உரிமை மீறல் கொடூரங்களை கணக்கில் எடுக்காமல் (சில சமயங்களில் அந்த கொடூர சாதனைகளையே அவர்களின் மேலதிக தகுதியாகக் கருதி) யுத்தம் முனைக்கு வெற்றிலை வைத்து அழைத்து, கூலி வழங்கும் உறுதியைத் தருகின்ற உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் தான் அவர்கள் போக முடியும். இதுதான் கள யதார்த்தம்.

யுத்தம் முடிந்த பின்னராவது பௌத்த - சிங்களப் பேரினவாத அரசு தன்னைத் திருத்தி நேசீர் படுத்தியிருக்கலாம். தனது பேரினவாத மேலாண்மை ஆக்கிரமிப்புத் திமிரை கொஞ்சம் ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டு, சமரசப் போக்குடனும், தாராள மனதுடனும் நடந்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

தமிழர் தேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, சிங்கள மயப்படுத்துவதற்காக, யுத்தம் முடிந்த பின்னரும் படைகளுக்கு சிங்களவர்களை எண்ணுக்கணக்கின்றி சேர்த்துத் தள்ளியது. சிங்கள இராணுவத்தை ஊதிப் பெருப்பித்து, தமிழர் தேசமெங்கும் இராணுவத்தை அடர்த்தியாக விதைத்தது.

யுத்தம் முடிந்த பின்னரும் படையினர் எண்ணிக்கையை கணக்கு வழக்கின்றிக் கூட்டிய முட்டாள் ஆட்சிப்பீடம் இலங்கையினுடையது. அதனால்தான் நாடு இன்று இந்தக் கதியில் என்பது துலாம்பரமானது.

யுத்தம் முடிந்த பின்னராவது தனது ஆக்கிரமிப்பு அகோரத்தை குறைத்து, படையைச் சுருக்கி, அந்த நிதியை இருந்த படையினருக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்கும் ஆக்கபூர்வமாக செலவிட்டிருந்தால் நாடு இந்த மோசநிலையை இவ்வளவு விரைவாக எட்டியிருக்காது.

இராணுவத்தினரும் இப்படி வெளிநாட்டுக் கூலிப்படைகளாக ஓட வேண்டிய நிலைமையும் வந்திராது.

(காலை முரசு ஆசிரியர் தலையங்கம்)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி