ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் அப்பதவியில் அச்சமயம் இருப்பவருக்கு நிரந்தரமானது அல்ல. அது பெரும்பாலும் பதவியில்

இருக்கும் சமயம் அவருக்குப் புரிவதில்லை.

அந்தப் பதவியில் இருக்கும் போது போடும் ஆட்டங்களுக்குப் பின்னர் பதில் கூற வேண்டி வரும் - பொறுப்புக்கூறல் கடப்பாடு இலகுவில் தவிர்க்க கூடியதல்ல - என்பது பெரும்பாலும் பதவிச் சமயத்தில் அவர்களுக்குப் புரிவதில்லை.

எனினும், இப்போது அது பட்டறிவாக புரியக்கூடிய சூழல் ஏற்பட்டு வருவது ஜனநாயகத்தின் மீட்சிக்கான ஓர் வலிமையான போக்குத்தான்.

பதவிக்காலத்தில் தாம் இழைத்த அல்லது இழைக்காமல் விட்ட காரணத்தினால் ஏற்பட்ட தவறுகளுக்காக பின்னர் அதிகம் நெருக்கடிகளை எதிர்கொள்பவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான்.

அரைவாசியில் பதவியை விட்டு ஓடித் தப்பிய கோட்டாபய ராஜபக்ஷ அதனால் நெருக்கடியை எதிர்கொள்வதை ஓரளவு குறைத்துக் கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.

ஜனாதிபதிப் பதவியை விட்டு இறங்கிய பின்னர், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அதிகம் சிரமங்களை எதிர்கொள்பவராக அல்லாடுபவராக மைத்திரிபால சிறிசேனவே உள்ளார்.

ஜனாதிபதிப் பதவியில் இருக்கும்போதே தமது ஓய்வு காலத்துக்குத் தங்குவதற்கான அரச மாளிகை ஒன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டவர் மைத்திரிபால. இப்போது அதை அவர் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றது உயர் நீதிமன்றம்.

2015 ஜனாதிபதி தேர்தலில் வென்றபோது தான் ஜனாதிபதி மாளிகையில் வசிக்கப்போவதில்லை, பதிலாக அதுவரை தான் தங்கி இருந்த பஜட் வீதி உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தொடர்ந்தும் தங்கிஇருந்து பணியாற்றபோகின்றார் என அறிவித்தார் மைத்திரிபால சிறிசேன.

புதிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் என்ற அடிப்படையில் அது பெரும் செலவில் மறுசீரமைக்கப்பட்டது. அருகில் இருந்த இன்னொரு அரச உத்தியோகபூர்வ இல்லமும் அதனுடன் இணைத்துப் பெருஞ்செலவில் ஒழுங்கமைக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்து போகும் சமயத்தில், முன்னாள் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லமாக அதைத் தொடர்ந்து தாம் பயன்படுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானத்தையும் அவர் எடுக்க வைத்தார். அந்தத் தீர்மானமே இப்போது உயர்நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தாமே ஜனாதிபதியாகவும், தீர்மானம் எடுக்கும் சபையின் தலைமை உறுப்பினராகவும் இருந்து கொண்டு, தமக்குச் சார்பாக அந்த தீர்மானத்தை எடுத்தமை இயற்கை நீதிக்கு பொருத்தமற்றது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதே போல ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பதவியில் இருந்தபோது ஓய்வு பெறும் ஜனாதிபதிக்கான அரச வசதியாக மாதிவெலவில் அரை ஏக்கர் காணியை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டு அது அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அவர் பதவி இழந்த போது, அந்தக் காணி வழங்கலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையால் வேறு வழியின்றி அதைத் திரும்பக் கையளிக்க வேண்டியவரானார் சந்திரிகா.

ஒரே சமயத்தில் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் - சந்திரிகா, மஹிந்த, மைத்திரி, கோட்டாபய ஆகியோருக்கும் – முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாஸவின் மனைவிக்கும் உரிய ஓய்வு வசதிகள், சிறப்புரிமைகள், பிற ஒழுங்குகளை நாடு செய்ய வேண்டியுள்ளது.

அடுத்த செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தலுடன் இந்தப் பட்டியலில் மேலும் ஒருவரின் எண்ணிக்கை அதிகரித்து விடுமோ என்னவோ..!

எது, எப்படி என்றாலும் அவர்கள் அதி காரத்திலிருந்து இறங்கியதும், அவர்களின் ஆட்டம் அடங்கிவிடும் என்பதையும், கடந்த காலச் சம்பவங்களுக்கு தாங்கள் பொறுப்பு கூற வேண்டி இருக்கும் என்பதை யும் அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அரசமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களின்படி ஒரு வருடத்துக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளூராட்சித் தேர்தல்களை தமது அரசியல் சுய நோக்கங்களை அடைவதற்காக, குள்ளநரித் திட்டம் மூலம் தடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

மக்களின் வாக்குரிமையை பறித்த இந்த அடாவடிக்காகத் தாம் அதிகாரத்திலிருந்து - பதவியிலிருந்து - இறங்கியதும் பொறுப்புக்கூற வேண்டியவராக இருப்பார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அப்போது இதைப் போன்று எத்தனை புதிய, புதிய நெருக்கடிகள் அவருக்கு காத்திருக்கின்றனவோ தெரியவில்லை.

நன்றி - மாலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி