அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவாரா, இல்லையா என்பதை இன்னும் தாம் அறிவிக்கவே இல்லை என்று அண்மையில்

கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இப்போது அடுத்த ஜனாதி பதி தேர்தல் செப்டம்பரில் என்றும், தொடர்ந்து அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் நடக்கும் என்றும் தனது ஐ.தே.கட்சியின் உள்ளகக் கூட்டம் ஒன்றில் அறிவித்திருக்கிறார்.

ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக அவரே அந்தத் தேர்தலில் களமிறங்குவார் என்று கட்சி தீர்மானித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால அறிவிப்புகள் பலவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் தாமே இந்தப் பதவியில் இருப்பார் என்ற மிதப்புத் தொனிப்படவே வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையில் ஜனாதிபதிப் பதவியில் இருந்தபடி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியுற்ற ஒரே பிரமுகர் மஹிந்த ராஜபக்ஷதான். 2015 ஜனாதிபதி தேர்தலில் அந்த அனுபவம் அவருக்கு நேர்ந்தது. அப்போதும் கூட, அந்தத் தேர்தலின் பின்னர் தாமே ஜனாதிபதி என்ற மிதப்புடன்தான் மஹிந்த ராஜபக்ஷ நடந்துகொண்டார்.

அப்படித்தான் இப்போது ரணில் விக்கிரமசிங்கவும் நடந்து கொள்கின்றார் என்று தோன்றுகின்றது. ஜனாதிபதிப் பதவியில் இருப்பவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் போது, நாடாளுமன்றம் கலையும் தினம், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நாள்கள், வாக்களிப்பு தினம், புதிய நாடாளுமன்றம் கூடும் தினம் ஆகிய நான் குக்குமான திகதிகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்று 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்கத் தேர்தல்கள் திருத்த சட்டத்தின் பத்தாம் அத்தியாயம் கூறுகின்றது.

இதன்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்தில் இருந்து 10 முதல் 17 நாள்கள் வரை வேட்பு மனுக்கள் ஏற்றல் இடம்பெற வேண்டும். அதிலிருந்து நான்கு வாரங்களுக்குக் குறையாமலும் ஆறு வாரங்களுக்குக் கூடாததுமான ஒரு தினத்தில் வாக்களிப்பு இடம் பெற வேண்டும்.

அதாவது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்து ஆகக்கூடியது இரண்டு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடந்து விடும். நடந்துவிட வேண்டும்.

இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றமைப் போல அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் பதவியில் இருக்கும் ஜனாதிபதி நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொது தேர்தலுக்கு உத்தரவிட்டால்தான் அது சாத்தியமாகும்.

அப்படி வரும் நவம்பரில் தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அந்த மாதத்தில் தாமே ஜனாதிபதியாக இருப்பார் என்ற அடிப்படையில்தான் அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் என்று ரணில் அறிவித்திருக்கின்றார்.

அவரின் தற்போதைய ஜனாதிபதிப் பதவிக்காலம், இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் ஒரு நாளில் நடத்தப்பட வேண்டிய - நடத்தப்பட போகின்ற - அடுத்த ஜனாதிபதி தேர்தலின் முடிவு அறிவிப்போடு காலாவதியாகிவிடும்.

அதற்குப் பிறகான ஒரு தினத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஒரு தீர்மானத்தை அவர் எடுத்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாயின் அச்சமயத்திலும் அவரே ஜனாதிபதியாக இருக்க வேண்டும். ஆக, வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் வென்று, அதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலுக்கு வழி செய்வேன் என்பதை அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் என்ற தமது அறிவிப்பு மூலம் அவர் வெளிப்படுத்த எண்ணுகின்றார் என்று தோன்றுகின்றது.

1999 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர் அவர். 2010, 2015, 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் பிறருக்கு இடமளித்து, அந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வெறும் பிரசாரப் பிரமுகராகவே அவர் செயல்பட்டார்.

இப்போதும்கூட, தேசிய பட்டியல் மூலம் பின் கதவால் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து, நாடாளுமன்றில் பிற கட்சிகளின் தயவில் ஜனாதிபதியானவர் அவர். அவர் இப்போது தானே அடுத்த ஜனாதிபதி என்ற மிதப்பில் துள்ளிக்குதிக்கின்றார். அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி