“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு இருவர் போட்டியிடுகின்றார்கள் என்று சொல்வது தவறு. எமது கட்சியில்

பலருடைய பெயர்கள் தலைமைப் பதவிக்கு முன்மொழியப்படுகின்றன. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்துப் புதிய தலைவரைத் தீர்மானிப்பார்கள். எமது கட்சி ஜனநாயகக் கட்சி என்ற ரீதியில் மிகவும் ஆரோக்கியமான ஒரு விடயமாக நான் இதனைக் கருதுகின்றேன். எவர் வெற்றி பெற்றாலும் கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் இணைந்து செயற்படுவோம். இவரை விட்டால் வேறு ஆள் தலைமைப் பதவிக்கு இல்லை என்று வாழ் நாள் தலைவர்களையே வைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் போல் அல்லாது எங்களுடைய கட்சியிலே பலருக்குத் தலைமைப் பதவிக்குத் தகுதி இருக்கின்றது” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் - கட்டுக்கரை குளத்தில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், அதனுடன் தொடர்புபட்ட மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் இன்று (நேற்று) காலை கட்டுக்கரைகுளம் பகுதியில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பது குறித்து அந்த விவசாய அமைப்புகளோடு நீண்ட ஒரு உரையாடல் நடத்தப்பட்டது.

“வருகின்ற நாட்களில் சில சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாகத் தீர்மானித்திருக்கின்றோம். அத்தோடு மன்னார் மாவட்டத்துக்கு வந்துள்ளமையால் கட்சி உறுப்பினர்களோடும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக ஒரு சிறு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

“எங்களுக்குத் தெரிந்தபடி அடுத்த வருடம் நாட்டிலே தேர்தல் கள் பல நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஜனாதிபதி எந்தத் தேர்தலை நடத்தாமல் தடுத்து வைத்திருந்தாலும் கூட 2024 செப்டெம்பர், ஒக்டோபர் மாதம் அளவிலே ஜனாதிபதியினுடைய பதவிக் காலம் முடிவடை கின்றது. அது முடிவடைவதற்கு முன் செப்டெம்பர், ஒக்டோபர் மாதம் அளவிலே ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தியே ஆக வேண்டும்.

“ஆகையினாலே அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? அல்லது அதற்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றபடியால் நாடாளுமன்றம் தொடர்ந்து இயங்குமா? என்பது இப்பொழுது தெரியாமல் இருக்கின்றது. ஆனால், எது எப்படியாக இருந்தாலும் தேர்தல் ஒன்று நிச்சயமாக இன்னும் ஒரு வருட காலத்துக்குள் நடைபெற வேண்டும்.

“ஆகையினாலே தெற்கிலே விசேடமாக அதுகுறித்த பலவிதமான வியூக அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையிலே ஒருவருக்கும் 50 சதவீதத்திற்குக் கூடுதலான வாக்குகள் எடுப்பது முடியாத ஒரு விடயமாக தோன்றுகின்ற காரணத்தால் தமிழ் மக்களுடைய வாக்குகள் சம்பந்தமாக திரும்பவும் ஒரு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

“ஆகையினாலே நாங்கள் எங்களுடைய நிலைப்பாடு குறித்து மிகவும் அவதானமாகவும், ஒரு நீண்ட கால சிந்தனையோடும் செயற்பட வேண்டியதாக இருக்கின்றது. இதுஎங்களுக்குக் கிடைத்திருக்கின்ற இன்னொரு சந்தர்ப்பம். ஆகையினாலே இந்தத் தேர்தல் விடயங்களில் கட்சிகளோடுநாங்கள் ஏற்கனவே பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கின்றோம்.

“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக அவர்கள் நிலைப்பாடுகள் குறித்து சில பேச்சுகள் நடைபெற்றிருக்கின்றன. நாட்டிலே இருக்கின்ற மற்றப் பிரச்சினைகள் விசேடமாக பொருளாதாரப் பிரச்சினை சம்பந்தமாக நான் சென்ற ஆண்டிலிருந்து கட்சித் தலைவர் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி அழைத்திருக்கின்றேன்.

“அதற்குப் பல கட்சித் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள். சென்ற வாரமும் அதற்கு முதல் வாரமும் கூட அப்படியான ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதிலும் பலர் வந்து கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து மற்ற விடயங்கள் சம்பந்தமாகவும், வேறு கொள்கை நிலைப்பாடுகள் சம்பந்தமாகவும் நான் அடுத்த வருடத்தில் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினராக அழைப்பு விடுக்கும்போது அவர்கள் வருகின்றார்கள்.

“தேர்தல்கள் அண்மிக்கும்போது நாங்கள் இந்தக் கலந்துரையாடல்களை அடிப்படையாக வைத்து மக்களுக்கு எங்களுடைய நிலைப்பாடுகளைச் சொல்லி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று நினைத்திருக்கின்றோம்.

“மாவீரர் தின நினைவேந்தலின்போது பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தையும் உபயோகித்துள்ளனர். அது தவறான விடயம். அது சம்பந்தமாக நாங்கள் நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டிருக்கின்றோம். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. இது அரசு செய்திருக்கும் மிகவும் மோசமான ஒரு விடயம். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டது எனச் சொல்லப்படுகின்ற வேளையிலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒரு நினைவேந்தல் நிகழ்வு சம்பந்தமாக உபயோகிப்பது என்பது ஒரு பாரதூரமான விடயம்.

“அதனை நாங்கள் கண்டிக்கின்றோம். அதற்கு எதிர் நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கவுள்ளோம். ஜனாதிபதி ஒட்டுமொத்தமாக அரசமைப்பை மீறிச் செயற்படுகின்றார். தற்போது அவர் நியமித்துள்ள பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் என்பவர் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு நபர். அவர் இந்தப் பதவிக்குப் பொருத்தமற்றவர்.

“ஆகையினாலேஇந்த நியமனத்தையும் நாங்கள் கண்டிக்கின்றோம். இது அரசமைப்பைத் தெரிந்துகொண்டே மீறும் செயல். இதை நான்வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றேன். ஜனாதிபதி ஒருவர் அரசமைப்பைத் தெரிந்துகொண்டே மீறினால் ஜனாதிபதிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது போது மான காரணமாக கூட இருக்கின்றது.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு இருவர் போட்டியிடுகின்றார்கள் என்று சொல்வது தவறு. எங்களுடைய கட்சியின் யாப்பின் அடிப்படையிலே தலைமைப் பதவிக்குச் சிலருடைய பெயர்களை ஒரு குறித்த முறையிலே கட்சி உறுப்பினர்கள் பிரேரிக்கலாம். அப்படியாக இருவருடைய பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. எங்களு டைய சம்மதத்தோடுதான் அந்தப் பெயர் கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

“ஆனால், மற்றவர்கள்தான் எங்களுடைய பெயர்களைப் பிரேரித்திருக்கின்றார்கள். அப்படியாக ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் பிரேரிக்கப்படுகின்றபோது எங்களுடைய யாப்பிலேயே எப்படியாகத் தெரிவு நடைபெற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

“ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையிலே ஜனநாயகத்திலே பரிநாம வளர்ச்சியடைந்தோர், முதிர்ச்சி அடைகின்ற நிலையிலேயே ஒரு தலைமைப் பதவிக்குப் பலர் தகுதி உடையவர்களாக இருப்பது அந்தக் கட்சியினுடைய ஒரு பலமான விடயம். பல கட்சிகளுக்கு இவரை விட்டால் வேறு ஆள் தலைமைப் பதவிக்கு இல்லை என்று வாழ்நாள் தலைவர்களையே வைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் போல் அல்லாது எங்களுடைய கட்சியிலே பலருக்குத் தலைமைப் பதவிக்குத் தகுதி இருக்கின்றது.

எமது கட்சியில் பலருடைய பெயர்கள் தலைமைப் பதவிக்கு முன்மொழியப்படுகின்றன. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் 200 இற்கும் மேற்பட்டவர்கள்கூடி வாக்களித்துப் புதிய தலைவரைத் தீர்மானிப்பார்கள். மிகவும் ஆரோக்கியமான ஒரு விடயமாக நான் இதனைக்கருதுகின்றேன். எவர் வெற்றி பெற்றாலும் கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் இணைந்து செயற்படுவோம்” என்றார்.

(நன்றி: காலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி