மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் 'டெனெக்டெப்லேஸ்' (Tenecteplase) ஊசி மருந்துத் தொகுதியை
பாவனையிலிருந்து நீக்குமாறு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.
இந்த மருந்து தொடர்பாக வைத்தியசாலைகளிலிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த ஊசி மருந்துத் தொகுதியை பாவனையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஊசி மருந்துத் தொகுதி இந்தியாவிலிருந்து TNV 1B24A08 மற்றும் TNV1B24E07 ஆகிய தொகுதி இலக்கங்களின் கீழ் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 'டெனெக்டெப்லேஸ்' (Tenecteplase) ஊசி மருந்துகள் தற்போது வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், அவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் பாவனைக்காக இதற்குப் பதிலாக மாற்று ஊசி மருந்துகளும் இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.