இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாகத் தன்னைக் கைது செய்வதற்காக கொழும்பு நீதவான்
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளாய்வு செய்து இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை நேற்று (28ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அதன் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள மேற்படி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டது.
குறித்த பிடியாணையை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ விடுத்த கோரிக்கை தொடர்பில் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்காத கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா காலிங்கவன்ச, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் மாத்திரம் அனுப்புவதாகக் குறிப்பிட்டார்.
இந்த மீளாய்வு மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் இருந்த "வலிகொவ்வா" என்ற கப்பலைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தி 2013ஆம் ஆண்டு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்ததாகத் தெரிவித்தார்.
இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஜூலை மாதம் 02ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்த போதிலும், காய்ச்சல் காரணமாக அன்று தனது கட்சிக்காரரால் ஆஜராக முடியவில்லை எனவும், அது குறித்து ஆணைக்குழுவிற்கு மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்க தனது கட்சிக்காரர் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
அதன் பின்னர், சட்டத்தின்படி தனது கட்சிக்காரருக்குக் கிடைத்துள்ள உரிமைகளின் அடிப்படையில் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்ததாகவும், அந்த முன் பிணை மனு பின்னர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தனது கட்சிக்காரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்ததாகவும், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறிருக்க, கடந்த 12ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, தனது கட்சிக்காரரைக் கைது செய்வதற்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பிடியாணை நீதிவானால் பிறப்பிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, இவ்வாறான பிடியாணையைப் பெறுவதற்கு முன்னர் சாட்சிய விசாரணை நடத்துவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, ஆனால் தனது கட்சிக்காரருக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதிவானால் இந்தப் பிடியாணை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சாட்சிய விசாரணை இன்றிப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அதன்படி, கடந்த 12ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவானால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை மீளாய்வு செய்யுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அத்துடன், இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தனது கட்சிக்காரருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளதாகவும், அதற்கமைய தனது கட்சிக்காரர் இன்று (29) நிச்சயமாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.