வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் துப்பாக்கியால் சுட்ட ஷாரூக் எனும் நபர் உத்தர பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதுடன், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

ஷாரூக் போலீஸ்காரர் மீது துப்பாக்கியால் சுடுகிறார். இந்த இளைஞனின் பின்னால் கற்களை வீசும் ஒரு கூட்டம் இருக்கிறது. சிவப்பு சட்டை அணிந்த இந்த இளைஞன், போலீஸ்காரரை நோக்கி கைத்துப்பாக்கியைக் காட்டியவாறே முன்னேறிச் செல்கிறான். கூட்டமும் அந்த இளைஞனுடன் முன்னோக்கி நகர்கிறது, துப்பாக்கியால் சுடும் ஓசை ஒலிக்கிறது.

இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ள த ஹிந்து பத்திரிகையாளர் செளரப் திரிவேதி, "ஒரு சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் ஜாஃப்ராபாத்தில் துப்பாக்கியால் சுடுகிறார். இந்த நபர் போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார். ஆனால் போலீஸ்காரர் உறுதியாக நின்றார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக திங்கட்கிழமையன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பி.டி.ஐ பத்திரிகையாளர் ரவி செளத்ரி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார், ஆனால் இந்த படத்துடன் இந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், என்டிடிவி, இவர் பெயர் ஷாருக் என்று குறிப்பிட்டுள்ளது. டெல்லி போலீசார் இவரை காவலில் எடுத்துள்ளனர். தகவல் தெரிந்து கொள்வதற்காக டெல்லி போலீசாரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் இதுவரை போலீசாரிடமிருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

டெல்லி வன்முறை: போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் CAA ஆதரவாளரா?

கடந்த ஒரு வாரமாக டெல்லி வன்முறையில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) இந்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

38 பேர் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையிலும், ஐந்து பேர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையிலும், மூன்று பேர் லோக் நாயக் மருத்துவமனையிலும், ஒருவர் ஜக் பர்வேஸ் சந்தர் மருத்துவமனையிலும் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

கடந்த மாதம் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (திங்கட்கிழமை) கூடின.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், மாநிலங்களவை கூடியது முதலே டெல்லி வன்முறை தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதை அடுத்து அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டெல்லியில் மூன்று நாட்கள் கலவரம் நடந்தபோது மத்திய அரசு "தூங்கிவிட்டது" என்று குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதுடன், மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, "இதுகுறித்து விவாதிப்பது மிகவும் முக்கியமானது, ஆனால் அதற்கு முன்னர் டெல்லியில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன் பிறகு, இதுபோன்ற வன்முறைகளை தடுப்பது குறித்து நாம் விவாதிக்கலாம்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து மதியம் இரண்டு மணிக்கு கூடிய இரண்டு அவைகளிலும் தொடர்ந்து டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிவரை இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, டெல்லி வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் அருகே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரவிந்த் கேஜ்ரிவால்

குறிப்பாக, இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோர் இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

இழப்பீடு அறிவிப்பு

டெல்லி வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அங்கித்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் கேஜ்ரிவால் உறுதி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றொரு போலீஸ் தலைமைக் காவலரான ரத்தன் லால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி