தொடங்கொடையில் உள்ள வீடொன்றில் இன்று (14) அதிகாலை ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி
கொல்லப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடங்கொடை, தொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் வீடு திருத்தப்பட்டு வரும் நிலையில், மனைவி மற்றும் குழந்தையுடன் மனைவி வீட்டில் தங்கியிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன் மற்றும் பின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த கொலையாளிகள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் தனியார் வாகனம் ஒன்றில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்டவரும் சந்தேகநபர்களும் மத்துகம பிரதேசத்தில் உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் நெருங்கி பழகியதாகவும், பின்னர் ஒரு வருடமாக பகை இருந்ததாகவும், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த மாதத்திற்கு முன்னர் குழுவினருடன் சென்று கொலை செய்யப்பட்டவர், அவரை தாக்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.