இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று திங்கட்கிழமை காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால்

பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மஹாநாயக்க தேரர்கள், சமயத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தனது பதவிக்கான சத்தியப்பிரமாணத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக முதற்தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கூறிய முக்கிய ஏழு விடயங்கள் வருமாறு,


01. வெற்றியின் பிரதான காரணி : பெரும்பான்மை சிங்கள் மக்கள்

தான் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு சிறப்பான பின்புலமாக அமைந்தது இலங்கையின் நாலா புறங்களிலும் உள்ள மகா சங்கத்தினர் தனக்கு வழங்கிய ஆசீர்வாதமே என தனது உரையைத் தொடங்கிய கோட்டாபய ராஜபக்ஸ, தனது வெற்றியின் பிரதான காரணி நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களே என்பதை தான் ஆரம்பத்திலிருந்தே அறிந்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.

 

02. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை
தனது வெற்றியின் பங்காளர்களான ஆகிக் கொள்ளுமாறு தமிழ் முஸ்லிம் மக்களிடம் வேண்டிக் கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ இங்கு குறிப்பிட்டார். எனினும் தான் எதிர்பார்த்தவாறு அச்சமூகத்திடமிருந்து வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக உண்மையான இலங்கையர்களாக தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

 

03. சமய மற்றும் தேசிய அடையாளங்களை பாதுகாத்து வாழக்கூடிய சூழல்
பௌத்த சிந்தனைகளைப் பாதுகாத்து போசிப்பதற்கும், சிங்கள கலாசாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்கு அரச அனுசரணையினை வழங்குவதாகவும் புதிய ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் தமது சமயம் மற்றும் தேசிய அடையாளங்களைப் பாதுகாத்து கௌரவமாக வாழக் கூடிய உரிமையினை பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.

 

04. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
இலங்கை தீவிரவாதம், பாதாள உலகச் செயற்பாடுகள், கப்பம், போதைப் பொருள் வர்த்தகம், பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் அற்ற பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான தேசிய பாதுகாப்பு பொறிமுறையினை மீண்டும் பலப்படுத்துவதாக புதிய ஜனாதிபதி இதன் போது கூறினார்.

 

05. கொள்கைப் பிரகடணத்தில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதி
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்த தனது கொள்கைப் பிரகடணத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் தனது பதவிக் காலத்தினுள் நிறைவேற்றுவதாக மக்களுக்கு இதன் போது வாக்குறுதி வழங்குவதாக ஜனாதிபதி கூறினார். தனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் புதிய ஜனாதிபதி இதன் போது கூறினார்.
 
06. வெளிநாடுகளிடம் கோரிக்கை
 

உலக அரசியலில் பல்வேறு நாடுகளுக்கிடையான அதிகாரப் போராட்டங்களில் இலங்கை தலையிடாது எனத் தெரிவித்த புதிய ஜனாதிபதி இலங்கையுடன் உறவுகளை ஏற்படுத்தும் போது இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக் கொண்டார்.
 

07. புதிய அரசாங்கத்தை அமைப்பேன்
தனது கொள்கைக்கு அமைய செயற்படக் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதாகவும் புதிய ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். நான் இந்நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகும். நாட்டின் நலனுக்காக எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் இங்கு கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி